சென்னை:பிரபலமான தமிழ் - மலையாளம் இயக்குநர் - நடிகர் கொச்சின் ஹனீபா எனப்படும் வி.எம்.சி. ஹனீபா உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை சென்னையில் மரணமடைந்தார்.
நீண்ட காலமாக அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று மரணமடைந்தார்.
அவருக்கு வயது 59. மனைவி, இரு மகள்கள் உள்ளனர். இரு மகள்களும் இரட்டைக் குழந்தைகள் ஆவர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹனீபாவுக்கு கல்லீரலில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை 3 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
1951ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி பிறந்தவர் ஹனீபா. அவரது இயற்பெயர் சலீம் அகமது கெளஸ். பி.எஸ்.சி தாவரவியல் படித்தவர். கொச்சியில் உள்ள கலாபவன் என்ற பிரபல நாடகக் கலைக் கூடத்தில் சேர்ந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
ஒரு நாடகத்தில் அவருக்கு வைக்கப்பட்ட ஹனீபா என்ற கேரக்டர் பிரபலமானது. இதையடுத்து கொச்சின் என்ற பெயரையும், ஹனீபாவையும் சேர்த்து கொச்சின் ஹனீபா என்று அழைக்கப்பட்டார்.
1979ம் ஆண்டு அஷ்டவக்ரன் என்ற மலையாளப் படத்தில் நடிக்க ஆரம்பித்து சினிமாவில் இறங்கினார். மலையாளத்தைத் தொடர்ந்து தமிழ், இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் மகாநதி படம் இவருக்கு பெரும் ஏற்றத்தைக் கொடுத்தது. தொடர்ந்து பல்வேறு புகழ் பெற்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை என பலதரப்பு ரோல்களில் நடித்த திறமைசாலி நடிகர் இவர். இருப்பினும் மிகப் பெரிய காமெடியனாகவே இவர் புகழ் பெற்றார்.
மலையாளத்தில் 1993ம் ஆண்டு வாத்சல்யம் என்ற படத்தை இயக்கவும் செய்துள்ளார் ஹனீபா.
Related Entertainment News:பிரபல கன்னட நடிகர் அஸ்வத் மரணம்நடிகர் விஷ்ணுவர்தன் மாரடைப்பால் மரணம்!ஜோதிபாசு காலமானார்