டெல்லி: மண்ணெண்ணை விலையை லிட்டருக்கு ரூ.6-ம் சமையல் கேஸ் விலையை சிலிண்டருக்கு ரூ.100-ம் உயர்த்துமாறு நிபுணர் குழு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
அதேபோல பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 3-ம் டீசல் லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ. 4-ம் உயர வாய்ப்புள்ளது.
இந்த பரிந்துரையை அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ளுமா என்பது தெரியவில்லை. ஆனால் குறிப்பிட்ட அளவு விலை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் அரசுத் துறை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு கடும் வருமான இழப்பு ஏற்படுகிறது. எனவே பெட்ரோலிய பொருள்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று அந்த நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் பெட்ரோலிய பொருள்களின் விலையை உயர்த்துவது குறித்து பரிசீலிக்க கிரித் பரிக் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தேவ்ராவிடம் புதன்கிழமை அளித்தது.
இந்த அறிக்கையில் மண்ணெண்ணெய் (கெரசின்), சமையல் கேஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலையை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 6 உயர்த்த வேண்டும். சமையல் கேஸ் சிலிண்டருக்கு ரூ. 100 உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பதில் அரசு கட்டுப்பாட்டை நீக்கி, சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலையை நிர்ணயிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
விலை நிர்ணயத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 3-ம் டீசல் லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ. 4-ம் உயர வாய்ப்புள்ளது. கெரசின், சமையல் கேஸ் சிலிண்டருக்கு தொடர்ந்து மானியம் வழங்குவது அவசியமாகிறது என்றும் குழு கூறியுள்ளது.
இந்தப் பரிந்துரைகள் அரசிடமோ அல்லது மத்திய அமைச்சரவையிடமோ சமர்ப்பிக்கப்பட்டு பரிசீலிக்கப்படும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறினார்.
Related National News:
Petrol And Diesel Cess To Continue Till 2030Petrol Hike Tweaks Public To Save MoneyCentral Considers To Increase Petrol, Diesel Charges