Home Tamil News Tamil Nadu News கூட்டுறவுக் கடைகளில் துவரம் பருப்பு விலை குறைப்பு!


Illinois Institute Of Technology

Latest News:

கூட்டுறவுக் கடைகளில் துவரம் பருப்பு விலை குறைப்பு!

January 26, 2010 08:22:09

சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு மொத்த பண்டகசாலைகள், அமுதம் பல்பொருள் அங்காடிகளில் பல்வேறு ரக துவரம் பருப்பு வகைகளை அடக்க விலைக்கே விற்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.


துவரம் பருப்பு போன்ற பருப்பு வகைகளின் மொத்த விலை குறைந்தபோதிலும் சில்லரை விலை குறையவில்லையென்று முதல்வர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து முடிவு செய்வதற்கு, தலைமை செயலகத்தில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மேலாண் இயக்குனர் மற்றும் மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

"கூட்டுறவு மொத்த பண்டகசாலைகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நடத்தும் அமுதம் பல்பொருள் அங்காடிகள் மூலமாக துவரம் பருப்பு முதல் ரகம், துவரம் பருப்பு, இரண்டாம் ரகம் மற்றும் கனடா பருப்பு ஆகியவற்றை சிறப்பு விற்பனை பிரிவுகள் மூலமாக பொது மக்களின் நலன் கருதி அடக்க விலையிலேயே விற்பனை செய்யப்படும். 

இதற்காக தேவைப்படும் பருப்பினை, லாத்தூர், குல்பர்கா போன்ற உற்பத்தி செய்யப்படும் இடங்களிலிருந்தே நேரடியாக கொள்முதல் செய்து வழங்கப்படும்.

தற்போது, வெளிச்சந்தையில் துவரம் பருப்பு கிலோ ஒன்றுக்கு ரூ.75-ல் இருந்து ரூ.80 வரை சில்லரை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் நாளை (ஜன.27) முதல் தொடங்கப்படும் இச்சிறப்பு விற்பனையில் துவரம் பருப்பு முதல் ரகம் கிலோ ரூ.65-க்கும், துவரம் பருப்பு 2-ம் ரகம் கிலோ ரூ.60-க்கும், துவரம்பருப்புக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் கனடா பருப்பு கிலோ ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படும். கொள்முதல் விலைக்கேற்ப ஒவ்வொரு வாரமும் இந்த விலை மறுநிர்ணயம் செய்யப்படும்.

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு அங்காடிகள் நடத்தும் 200 கூட்டுறவு மொத்த பண்டகசாலை அங்காடிகளிலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நடத்தும் 25 அமுதம் பல்பொருள் அங்காடிகளிலும் தமிழகத்தில் உள்ள 295 மண்ணெண்ணெய் நிலையங்களிலும் இந்த சிறப்பு விற்பனை மேற்கொள்ளப்படும்.

இதில் சென்னையில் மட்டும் 21 அமுதம் பல்பொருள் அங்காடிகளிலும், 38 கூட்டுறவு மொத்த பண்டகசாலை அங்காடிகளிலும் இந்த சிறப்பு விற்பனை பிரிவுகள் மூலமாக பருப்பு விற்பனை செய்யப்படும். மானியவிலையில் பருப்பு விற்பனை தொடர்ந்து செய்யப்படுவதால் இந்த சிறப்பு விற்பனையில் ரேஷன் கடைகள் ஈடுபடாது", என்று கூறியுள்ளார்.


Related TamilNadu News:

விலை உயர்வுக்கு பிரதமரும்தான் பொறுப்பு!- சரத் பவார்
விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை என்ன? - கருணாநிதி விளக்கம்
ரேஷன் கடைகளில் காய்கறி விற்பனை! அலைமோதும் பெண்கள் கூட்டம்!!