திருவண்ணாமலை: சிவபெருமான் குடிகொண்டுள்ள திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு, 2700 அடி உயரமுள்ள மலை மீது இந்த தீபம் ஏற்றப்படுகிறது.
பஞ்ச பூதங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கார்த்திகை தீப திருவிழா நடக்கிறது.
தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 1,500 மீட்டர் திரி, 3,500 கிலோ நெய் ஆகியவை கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டு மலை உச்சிக்கு இன்று கொண்டு செல்லப்பட்டது.
இந்த மகாதீப விழாவுக்காக இன்று அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டது.
மகாதீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் வந்து குவிந்துள்ளனர். தீப விழாவில் 15 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் திருவண்ணாமலையில் வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மலை உச்சியில் மகா தீபம் ஏற்றிய பிறகே திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பக்தர்கள் தங்கள் வீடுகளிலும், கடைகளிலும் அகல்விளக்கு ஏற்றுவார்கள்.