கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சேயின் பதவிக்காலத்தை ஓராண்டு அதிகரித்து இலங்கை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதனால் அடுத்த 7 ஆண்டுகளுக்கு இலங்கை அதிபராக அவர் தொடர்கிறார்.
அதிபர் ராஜபக்சே தனது பதவிக்காலம் முடிவடைய 2 ஆண்டுகள் இருந்த போதிலும், அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்தினார். கடந்த 26-ந் தேதி நடைபெற்ற இத்தேர்தலில், ராஜபக்சே மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இலங்கை அரசியல் சட்டப்படி, ஒருவர் தொடர்ந்து 2-வது முறையாக அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் முதல் தடவை எந்த தேதியில் பதவி ஏற்றாரோ, அதே தேதியில்தான் அவரது 2-வது தடவை பதவிக்காலம் தொடங்கும். எனவே, தனது புதிய பதவிக்காலம் உடனடியாக தொடங்குமா? அல்லது அரசியல் சட்டப்படி, வருகிற நவம்பர் மாதம் தொடங்குமா? என்று ராஜபக்சேக்கு குழப்பம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர் சுப்ரீம் கோர்ட்டை அணுகினார்.
அவரது கருத்தை தலைமை நீதிபதி அசோக் டி சில்வா தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. ராஜபக்சே சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் மோகன் பெரிஸ், அதிபரின் புதிய பதவிக்காலம் நவம்பர் மாதம் தொடங்க வேண்டும் என்று வாதிட்டார்.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு அளித்தது. அதன்படி, ராஜபக்சே, நவம்பர் 19-ந் தேதியில் இருந்து 2 வார காலத்துக்குள் மீண்டும் அதிபராக பதவி ஏற்க வேண்டும். அவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து அவரது புதிய 6 ஆண்டு பதவிக்காலம் தொடங்கும்.
நவம்பர் 19-ந் தேதிக்கு கிட்டத்தட்ட ஓராண்டு இருப்பதால், ராஜபக்சேயின் பதவிக்காலமும் ஓராண்டு அதிகரிக்கிறது. எனவே, அவர் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் அதிபர் பதவி வகிப்பார்.
இந்த தகவலை அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Related International News:
18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராஜபக்சே வெற்றி
ராஜபக்சே மீண்டும் இலங்கை அதிபராகிறார்!எஸ்எம்எஸ் மூலம் ஓட்டுக் கேட்கும் ராஜபக்சே