கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை இலங்கை அரசாங்கத்தால் இப்போதைக்கு வழங்கமுடியாது, என்று கூறியுள்ளது இலங்கை அரசு.
முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதை விடுதலைப் புலிகள் மறுத்தனர். பின்னர் ஆமாம் என்று ஒரு தரப்பினர் கூறினர். எனவே பிரபாகரன் மரணம் குறித்த சர்ச்சை முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கிறது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் பிரபாகரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது. பிரபாகரன் மரணமடைந்து விட்டார் என்றால் அதற்கான இறப்புச் சான்றிதழை வழங்குமாறு இலங்கையிடம் கோரியது சிபிஐ. அப்போதுான் ராஜீவ் வழக்கு முடிவுக்கு வரும் என்பதால் மத்திய அரசும் இதுதொடர்பாக கோரிக்கை வைத்தது.
இருப்பினும் இதுவரை இறப்புச் சான்றிதழை இலங்கை வழங்கவில்லை. மாறாக மரணத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ் ஒன்றை மட்டுமே இந்தியாவிடம் வழங்கியுள்ளதாம்.
இந்த நிலையில் சமீபத்தில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சிபிஐயிடம் பிரபாகரனின் மரணச் சான்றிதழ் கிடைத்து விட்டதா என்று கேட்டதற்கு 'இல்லை' என்று சிபிஐ பதிலளித்தது.
ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை இலங்கை சிபிஐயிடம் வழங்கியுள்ளதாக கூறினார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிபிஐ இயக்குநர் அஸ்வினி குமார் கூறுகையில், பிரபாகரனின் மரணச் சான்றிதழ் இதுவரை வரவில்லை, நாங்களும் கேட்டுக் கொண்டே உள்ளோம், என்றார். இதனால் குழப்பம் மேலும் அதிகரித்தது.
இந்தச் சூழ்நிலையில் மரணச் சான்றிதழக்கு சமமான கடிதத்தை இந்தியாவிடம் கொடுத்துள்ளதாக இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
"பிரபாகரன் மரணத்தை உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட கடிதம் ஒன்று இலங்கை நீதிமன்றத்தால் தரப்பட்டுள்ளது. இந்தியாவிடம் இலங்கை அரசு வழங்கிய சான்று இதுதான்.
பிரபாகரனின் மரணம் தொடர்பான ஆவணங்களை இந்தியாவிடம் வழங்குவதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளன. அவரது மரண சான்றிதழை வழங்குவதற்கு பல நடைமுறைகளும், கால அவகாசமும் தேவைப்படும்.
எனவேதான், நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சட்டப்பூர்வ ஆவணத்தை இந்தியாவிடம் வழங்கி உள்ளோம். எப்போது மரணச் சான்றிதழ் தரமுடியும் என்பதை இப்போது சொல்வதற்கில்லை" என்றார்.
Related Srilanka News:
பிரபாகரன் மரண சான்றிதழ்... மீண்டும் மறுக்கும் சி.பி.ஐ.பிரபாகரன் 'மரண சான்றிதழை' இலங்கை அரசு இதுவரை தரவில்லை!! - சிபிஐபிரபாகரனும் முக்கிய தளபதிகளும் இருப்பை உறுதி செய்துள்ளனர்