சொராபுதீன் போலி என்கெளண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள
குஜராத் மாநில முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி என்.கே. அமீன் அப்ரூவராக
மாற உள்ளார். இதனால் முன்னாள் உள்துறை அமைச்சர் அமீது ஷாவுக்கு தலைவலி
அதிகரித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் தாதாவாக இருந்தவர் சொராபுதீன். பணக்காரர்களை மிரட்டி
பணம் பறிப்பது இவர் வேலை. இவரும் இவருடைய மனைவி கெளசர் பீவியும் 2005 நடந்த
போலீஸ் என்கெளண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது ஒரு போலி
எண்கெளண்டர் என மாநில அரசே 2007 இல் நீதிமன்றத்தில் கூறியது.
இதைத் தொடர்ந்து, போலி எண்கெளண்டர் நடத்திய போது பதவியில் இருந்த
காவல்துறை உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
சொராபுதீன் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி அவருடைய சகோதரர்
தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு
உத்தரவிட்டது.
சொராபுதீன் போலி எண்கெளண்டரில் குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமீது
ஷாவுக்கு தொடர்பு இருக்கிறது என்று கண்டறிந்த சிபிஐ அவருக்கு இரண்டு முறை
சம்மன் அனுப்பியது. சிபிஐ முன்பாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த அமீது ஷா
வெள்ளிக்கிழமை அன்று தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்தார்.அதன்பின்னர் அவர்
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிபிஐ அலுவலத்துக்கு வந்தபோது வாசலில் வைத்து
கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் நீதிமன்ற காவலில் உள்ளார். இவர் சார்ந்த பாஜக கட்சி 'அமீது ஷா
மீது ஒரு தவறும் இல்லை. காங்கிரசின் கைப்பாவையாக சிபிஐ செயல்படுகிறது.
எதிர்க்கட்சியினரை மிரட்ட சிபிஐயை காங்கிரஸ் பயன்படுத்துகிறது' என்று வாதாடி
வருகிறது.
இந்நிலையில் சொராபுதீன் வழக்கில் கைது செய்யப்பட்டு ,சிறையில் உள்ள
முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி என்.கே. அமீன், அமீது ஷாவுக்கு எதிராக
அரசுத் தரப்பு சாட்சியாக மாற இருக்கிறார். இதுகுறித்து அவருடைய வழக்கறிஞர்
ஜெட்கிஷ் ரமணி கூறுகையில் 'சொராபுதீன் வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக
மாற அமீன் விரும்புகிறார். அதற்கான முறையான மனு சிபிஐ நீதிமன்றத்தில்
விரைவில் தாக்கல் செய்யப்படும்' என்று கூறியுள்ளார்.
அரசுத் தரப்பு சாட்சியாக மாறும் அமீனின் மனு இன்று மாலைக்குள் சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விடும் எனத் தெரிகிறது.
சொராபுதீன் போலி எண்கெளண்டர் நடந்தபோது காவல்துறை உதவி ஆணையாளராக இருந்த
அமீன்,சொராபுதீன் எண்கெளண்ட்டர் செய்த காவல்துறை குழுவிலும் இடம்
பெற்றிருந்தார்.
சொராபுதீனை பகடைக்காயாக வைத்துக்கொண்டு பணக்காரர்களை மிரட்டி பணம்
பறித்து வந்தது உள்துறை அமைச்சராக இருந்த அமீது ஷா தான் என்றும், அதில்
பிரச்னை ஏற்படவே சொராபுதீன் போலி எண்கெளண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்
என்றும், அதற்கு பின்னணியில் இருந்தபடி உத்தரவிட்டது அமீது ஷா என்றும்
கூறப்படுகிறது. இதற்கு போலீஸ் உயரதிகாரிகளும் துணையாக இருந்துள்ளனர்
என்றும் கூறப்படுகிறது.
அதனால் காவல்துறை உயர் அதிகாரி அமீன் அரசுத் தரப்பு சாட்சியாக மாறுவது,
அமீது ஷா மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவது போலாகும் எனக்
கூறப்படுகிறது.
-சிவாஜி டிவி
Related National News:
BJP neglects PMs lunch - Tamil News OnlineAmit
Shah asked more time from CBI - Online Tamil NewsCBI
summoned Gujarat minister Amit Shah in Sohrabuddin case - India Latest
News