முதல்வர் கருணாநிதியின் சாதனை என்று சொல்லும் அளவுக்கு மிகச் சிறப்பான முறையில் அமைந்துள்ளது புதிய சட்டசபை வளாகம்.
சட்டப்பேரவையில் முதல்வர் கருணாநிதி 50 ஆண்டுகள் உறுப்பினராக இருந்ததன் பொன்விழா கொண்டாடப்பட்டபோது, நாடே பார்த்து வியக்கும் வகையில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் சென்னையில் கட்டப்படும் என்று கருணாநிதியே அறிவித்தார்.
அதேபோல தமிழக சட்டமன்ற, தலைமைச் செயலக கட்டிடம் வளாகம், சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுளளது. இதன் இன்னும் ஒரு பகுதி பணி நடந்து வருகிறது.
இது ஒரு பிரமாண்டமான கட்டுமானப் பணி ஆகும். கட்டுமானத்துக்கான ஒப்பந்தப்புள்ளி 5.9.08 அன்று திறக்கப்பட்டது. 12.11.08 அன்று புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. 18 மாதங்களுக்குள், அதாவது 11.5.10-க்குள் புதிய சட்டசபையை கட்டி முடிப்பதற்காக ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டு இருந்தது.
2010-11-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டினை புதிய சட்டசபையில் தாக்கல் செய்துவிடவேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி விரும்பினார். அதைத் தொடர்ந்து, 2010-ம் ஆண்டு மார்ச் 10-ந் தேதிக்குள்ளாக சட்டமன்ற மண்டபத்தை மட்டுமாவது முழுவதுமாக கட்டிமுடித்துவிட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
அதன்படியே மார்ச் 10-ம் தேதி முதல்கட்டப் பணிகள் முடிந்துவிட்டன. இன்று பிரதமர் அதனை திறந்து வைக்கிறார். தலைமைச் செயலகம் மட்டும் இன்னும் சில மாதங்கள் கழித்துதான் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலக வளாகம் இரண்டு பிரிவுகளாக பிரித்து கட்டப்பட்டு வருகிறது.
முதல் பகுதி ஏ பிளாக் என்று அழைக்கப்படுகிறது. ஏ பிளாக், 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு 4 பெரும் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இது 9 லட்சம் சதுர அடிபரப்பில், ரூ.425.57 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
இந்து மத தர்மப்படி...
ஒவ்வொரு பிரிவும் வட்ட வடிவிலான கட்டிடமாக அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, மாநாட்டு அரங்கம், கூட்ட அரங்கம் போன்றவை வட்ட வடிவத்தில்தான் கட்டப்படுகின்றன. அது போலவும், இந்துமத தர்மப்படி சக்கரம் என்பதை அடிப்படையாக வைத்தும், சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள 4 கட்டிடங்களும் சக்கரம் போல் வட்ட வடிவத்தில் கட்டப்பட்டுள்ளன. அந்த கட்டிடங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.
கூவம் ஆற்றை ஒட்டிய சுவாமி சிவானந்தா சாலையின் (சென்னை தொலைக்காட்சி நிலைய சாலை) அருகில் முதல்-அமைச்சர் வட்டத்தில் (சி.எம். சர்க்கிள்) தொடங்கி, நூலக வட்டம் (லைப்ரரி சர்க்கிள்), சட்டப்பேரவை வட்டம் (அசம்ப்ளி சர்க்கிள்) என தொடர்ந்து, வாலாஜா சாலை அருகே பொது வளாகம் (பப்ளிக் பிளாசா) என நீள்வட்ட வடிவத்தில் இந்த ஏ பிளாக் பகுதி போய் முடிகிறது.
இரண்டாவது பகுதியான பி பிளாக்கில், தலைமைச் செயலக அலுவலகங்கள் அமைகின்றன. 7 மாடிகளை கொண்ட ஏழு தனித்தனி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பி பிளாக் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு மே மாதத்தில் முடிக்கப்படவுள்ளது.
ஜொலிக்கும் மேற்கூரை...ஏ பிளாக்கில் உள்ள 4 கட்டிடங்களும் 6 மாடி கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. இதில், சட்டப்பேரவை அமையவுள்ள சட்டப்பேரவை வட்டத்தில் 100 அடி உயரம் கொண்ட 6 மாடி கட்டிடத்தின் மீது, அதே அளவு உயரம் (100 அடி) கொண்ட பிரமாண்ட மேற்கூரை (டோம்) அமைக்கப்பட்டு வருகிறது. இந்த டோமின் மீது கண்ணாடி கூரை அமைக்கப்படும். இதனால் சட்டமன்ற அரங்கினுள் நேரடியாக சூரிய வெளிச்சம் படும். இந்த கூரையை சட்டமன்ற அரங்கில் தரைத்தளத்தில் அமர்ந்தபடியே பார்த்து ரசிக்க முடியும்.
இந்த பிரமாண்ட மேற்கூரையை, துருப்பிடிக்காத வகையில் தயாரிக்க தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதால், சட்டமன்ற திறப்பு விழாவுக்கென்றே பிரத்தியேகமாக தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டு வருகிறது.
ஏ பிளாக்கில் உள்ள 4 கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துவிட்டன. மற்ற பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மொத்த பணிகளும், வரும் மே மாதத்தில் முடிக்கப்பட்டுவிடும். 6 மாடிகள் கொண்ட சட்டப்பேரவை வட்டத்தில் உள்ள 6 மாடிகளில், முதல் 2 தளங்களில் மட்டும் தற்போது பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளன.
சட்டப் பேரவை வட்டம்இன்று திறக்கப்படும், சட்டப் பேரவை கட்டிடத்தின் தரைத்தளத்தில் சட்டசபை (285 எம்.எல்.ஏ. இருக்கைகள்), சபாநாயகர் அறை, சட்டமன்றக் கட்சி அலுவலக அறைகள் (5 அறைகள்), முதல்வரின் செயலக அறை, கொறடா அறை, சார்புச் செயலாளர் அறை, எதிர்கட்சித் தலைவர் அறை, துணை சபாநாயகர் அறை, ஒப்பனை அறை ஆகியவை உள்ளன.
முதல் தளத்தில் கூட்ட அரங்கு, பொதுப்பணித் துறை பராமரிப்பு அலுவலகம், பிரிவு அலுவலகம், பத்திரிகையாளர் கேலரி, சார்புச் செயலாளர் பிரிவு, உணவுக் கூடம், ஒப்பனை அறை;
2-வது தளத்தில் துறைச் செயலாளர் அலுவலகம், கூட்ட அரங்கு, உணவுக் கூடம், பார்வையாளர் கேலரி, ஒப்பனை அறை.
3-வது தளத்தில் சார்புச் செயலாளர் அலுவலகம், கூட்ட அரங்கு, கூடுதல் துறைச் செயலாளர் அறை, பிரிவு அலுவலகம், பார்வையாளர் அறை, வெளிநாட்டவர் பதிவு செய்யும் அறை, உணவுக் கூடம், ஒப்பனை அறை.
4-வது தளத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம், கூட்ட அரங்கு, உணவுக் கூடம், பிரிவு அலுவலகம், சார்புச் செயலாளர் அலுவலகம், ஒப்பனை அறை.
5-வது தளத்தில் துறைச் செயலாளர் அலுவலகம், கூட்ட அரங்கு, இணைச் செயலாளர் அறை, ஒப்பனை அறை. 6-வது தளத்தில் செயலாளர் அறை, இணைச் செயலாளர் அறை, முதல்-அமைச்சர் செயலக அலுவலகம், கண்காணிப்புப் பிரிவு, பொதுப்பணித் துறையின் மின்பராமரிப்புப் பிரிவு, பார்வையாளர்கள் அறை, ஒப்பனை அறை ஆகியவை அமைகின்றன.
பொது மக்கள் தாராளமாக வரலாம்!இதுபோல், முதல்வர் வட்டம், நூலக வட்டம், பொது வளாகம் ஆகியவற்றிலும் பல்வேறு அலுவலகங்கள் அமைக்கப்படும் வகையில் தனித்தனி 6 மாடி கட்டிடங்களாக உருப்பெற்றிருக்கின்றன. பொதுமக்கள் எவ்வித தடையுமின்றி, இந்த மாபெரும் வளாகத்துக்குள் வந்துசெல்லவேண்டும் என்று முதல்வர் விரும்பியதால், வாலாஜா சாலையை ஒட்டிய பகுதியில் பொது வளாக பகுதி (பப்ளிக் பிளாசா) அமைகிறது. இதில் குறிப்பிட்ட பகுதி வரை பொதுமக்கள் எவ்வித தடையுமின்றி வந்து செல்லலாம்.
அவர்கள் உட்கார்ந்து ஓய்வெடுத்துச் செல்ல வசதிகள் செய்யப்படும். அங்கு தோட்டம் போன்றவையும் அமைக்கப்படும். அதனை தாண்டிச் செல்ல முடியாத வகையில் கண்ணாடி தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஏ பிளாக்கில் உள்ள 4 கட்டிடங்களின் ஒவ்வொரு தளமும் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தளமும் இணையும் இடத்தில் மெட்டல் டிடெக்டர் உடன் கூடிய வாசல்கள் உள்ளன. சோதனைக்குப் பிறகே அடுத்த கட்டிடத்துக்கு செல்ல முடியும். அதிகாரிகளுக்கான நுழைவு வாயில், சுவாமி சிவானந்தா சாலை பகுதியில் அமைக்கப்படுகிறது.
மாடியில் பூந்தோட்டம்புதிய சட்டசபை வளாகத்துக்கு (ஏ பிளாக்) தனி துணை மின்நிலையம், தனி தொலைபேசி இணைப்பகம், தகவல் தொழில்நுட்ப வசதிகளை நிர்வகிப்பதற்காக எல்காட் பிரிவு அமைக்கப்பட உள்ளன. ஏ பிளாக்கை அமைப்பதற்கு 4 ஆயிரம் தொழிலாளர்கள் இரவு பகலாக உழைத்துள்ளனர்.
முதல்வர் அலுவலகம் அமையும் கட்டிடம் சுவாமி சிவானந்தா சாலை-அண்ணா சாலை சந்திப்பு அருகே அமைகிறது. முதல்வரின் அலுவலக அறை, இந்த மாடியின் 6-வது தளத்தில் அமைந்துள்ளது. அவர் அறையின் வலது பக்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு அரங்கும், இடது பக்கத்தில் அமைச்சரவை கூட்ட அரங்கும் அமைக்கப்பட உள்ளது.
பொதுத்துறை, நிதித்துறை, உள்துறை, திட்டங்கள் துறை, சட்டத் துறை ஆகிய முக்கியத் துறையின் செயலாளர்களில் அலுவலக அறைகள் ஏ பிளாக்கில் அமைகிறது. சட்டசபை செயலாளரின் அலுவலக அறை சட்டசபைக்கு அருகே தரைத் தளத்தில் அமைகிறது. மற்ற செயலாளர்களின் அலுவலக அறை, 6-வது தளத்தில் அமைகின்றன.
முதல்வரின் அறைக்கு எதிரே திறந்த வெளியில் அமைக்கப்பட்ட அழகிய மாடிப் பூந்தோட்டம் அமைக்கப்பட உள்ளது. பூங்கா போல் இந்தத் தோட்டம் வடிவமைக்கப்படும். ஓய்வு எடுப்பதற்கும், காற்றோட்டமாக உரையாடுவதற்கும் இந்தத் தோட்டத்தை முதல்வர் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தோட்டத்தைச் சுற்றி கண்ணாடிச் சுவர் அமைக்கப்படும்.
மற்றொரு ரூப் கார்டன் நூலக வட்டத்துக்கான கட்டிடத்தின் மேல் தளத்தில் அமைகிறது.
பூகம்பம் வந்தாலும்...சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகக் கட்டிடங்கள் அனைத்தும், பூகம்பத்தை தாங்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. வளாகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களும் குளுகுளு வசதி செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக பொதுப்பணித்துறை வரலாற்றில், இந்த கட்டிடம் சரித்திர முக்கியத்துவம் பெறுகிறது.
Related Tamil Nadu News:
புதிய சட்டசபை வளாகத்தை இன்று திறந்து
வைக்கிறார் பிரதமர்!புதிய
சட்டசபைக் கட்டடத்தின் சிறப்புகள்!
- தமிழக அரசு அறிக்கைபுதிய
சட்டசபை கட்டிடம்... கருணாநிதிக்கு
சோனியா பாராட்டு!