நாக்பூர்: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு நாள் மீதம் இருந்த நிலையில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.
சுமித் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 6-ந்தேதி நாக்பூரில் தொடங்கியது.
முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்கா 558 ரன்களும் (டிக்ளேர்), இந்தியா 233 ரன்களும் எடுத்தன. பாலோ-ஆனைத் தழுவிய இந்திய அணி 325 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது.
4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே மேற்கொண்டு 260 ரன்கள் சேர்த்தாக வேண்டிய கடினமான சூழலுக்கு மத்தியில் இருவரும் ஆட்டத்தை தொடங்கினர்.
ஆனால் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தன.
மறுமுனையில் தெண்டுல்கர், வாய்ப்பான பந்துகளை பவுண்டரிக்கு துரத்தி விட்டு ரசிகர்களை கொஞ்சம் உற்சாகப்படுத்தினார். தோல்வியின் பிடியில் இருந்து அணியை விடுவிப்பது மலைப்பான விஷயம் என்ற நிலையில், அவரது இன்னிங்ஸ் தென் ஆப்பிரிக்காவின் வெற்றியை தாமதப்படுத்துவதில் பங்குவகித்தது.
45 ரன்னில் இருந்த போது கேட்ச கண்டத்தில் இருந்து தப்பிய தெண்டுல்கர் இறுதியில் தனது 46-வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவர் பெற்ற 4-வது சதமாகும். அதே சமயம் இந்திய மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக எடுத்த முதல் செஞ்சுரியாகும்.
சுழற்பந்து வீச்சாளர் பால் ஹாரிஸ் அவர் ஸ்வீப் செய்ய முயன்ற போது, பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது. தெண்டுல்கர் (100 ரன், 179 பந்து, 13 பவுண்டரி) ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.
இதன் பின்னர் கேப்டன் டோனி (25 ரன், 112 பந்து), ஹர்பஜன்சிங்(39 ரன், 39 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஜாகீர்கான் (33 ரன், 57 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), விருத்திமான் சஹா (36 ரன், 101 பந்து) ஆகியோரின் இரட்டை இலக்க ஸ்கோர் பங்களிப்பு இந்தியாவின் தோல்வி வித்தியாசத்தை குறைக்க உதவியதே தவிர, அதனால் அணிக்கு எந்த உபயோகமும் இல்லை.
முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 6 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றியை சுவைத்தது.
தென்ஆப்பிரிக்க தரப்பில் ஸ்டெயின், ஹாரிஸ் தலா 3 விக்கெட்டுகளும், பார்னல் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் சாய்த்த ஸ்டெயின் இந்த டெஸ்டில் மொத்தம் 10 விக்கெட்டுகளை பெற்றிருக்கிறார். டெஸ்டில் அவர் 10 விக்கெட் எடுப்பது இது 4-வது முறையாகும். 253 ரன்கள் குவித்த தென்ஆப்பிரிக்க வீரர் ஹஷிம் ஆம்லா ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 2 டெஸ்ட் கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
Related Sports News:
தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்புசாம்பியன் டிராபி இன்று தொடக்கம்-இலங்கை-தென் ஆப்ரிக்கா பலப்பரீடசை
சாம்பியன் டிராபி-3வது போட்டியில் நியூலாந்து வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வெற்றி