டெல்லி, ஜன.16 -
நாட்டின் வளர்ச்சி விகிதம் படிப்படியாக உயர்வதற்கு, ரிசர்வ் வங்கி பெரும்பங்காற்றி உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் பவளவிழா ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக டெல்லியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பிரதமர், மத்திய வங்கியின் லட்சியங்கள் என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, உரையாற்றிய அவர், ரிசர்வ் வங்கி, இந்த 75 ஆண்டு காலத்தில் பிரமிக்கத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது.
''இந்தியா பின்பற்றி வரும் அடிப்படைப் பொருளாதாரக் கொள்கை பெரும்பாலும் மாற்றமின்றி தொடர்ந்து வருகிறது. உறுதியான வளர்ச்சி, சமூக நீதி ஆகியவற்றில் ரிசர்வ் வங்கி முக்கிய பங்காற்றி உள்ளது. தேசிய லட்சியங்களில் உறுதியும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டவர்கள் ரிசர்வ் வங்கியின் கவர்னர்களாக உள்ளதே இதற்கு காரணம். அந்தப் பாரம்பரியம் தொடர வேண்டும். ரிசர்வ் வங்கி வரலாற்றுக் கடமையைத் தொடர்ந்து ஆற்றும் என்று நம்புகிறேன்...''
இந்தியப் பொருளாதாரம் தற்போது 9 முதல் 10 சதவிகித வளர்ச்சி அடைந்து வருவதாகவும் அதற்கு ரிசர்வ் வங்கி வகுத்துள்ள திட்டங்களே பேருதவியாக இருந்தன என்றும் அவர் கூறினார். கடந்த 30 ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி ஏறுமுகத்திலேயே இருப்பதாக மன்மோகன்சிங் தெரிவித்தார். இவ்வளர்ச்சிக்கு தற்போது துணை நிற்கும், தேசிய விவசாய வளர்ச்சி வங்கி, ஐ.டி.பி.ஐ எனப்படும் இந்திய தொழில் வளர்ச்சி வங்கி ஆகியவை உருவாவதற்கும் ரிசர்வ் வங்கியே காரணம் என்றும் பிரதமர் தன் உரையில் குறிப்பிட்டார்.
Related National News:
நாளை அனைத்து வங்கிகள் ஸ்டிரைக்!21 ஆயிரம் கோடி கடன் வழங்குகிறது உலக வங்கிState Bank Employees Imply Strike On August 6-7