Home Tamil News National News தீவிரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில் குடியரசு தினவிழா ஏற்பாடுகள்...
  

Latest News:

தீவிரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில் குடியரசு தினவிழா ஏற்பாடுகள்...

January 25, 2010 10:25:01

டெல்லி: தீவிரவாதிகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில், அதைச் சமாளிக்கும் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளது இந்திய அரசு. 


போர் விமானங்கள் மற்றும் விமான எதிர்ப்பு பீரங்கிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றன.

தேசத்தின் பெருமை மிகு நிகழ்வுகளில் ஒன்றான குடியரசு தினவிழா நாளை ஜனவரி 26-ம் தேதி நடக்கிறது.

இதையொட்டி டெல்லியில் ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.

டெல்லியில், விஜய் சவுக்கில் இருந்து செங்கோட்டைவரை 8 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. ராஜபாதையில், ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.
 
இந்த ஆண்டு கவுரவ விருந்தினராக தென்கொரிய அதிபர் லீ மியுங் பாக் கலந்து கொள்கிறார். பிரதமர் மன்மோகன்சிங், மத்திய மந்திரிகள், பல்வேறு நாட்டு தூதர்கள், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், எம்.பி.க்கள் உள்பட லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் வண்ணமிகு நிகழ்ச்சி இது. 

இந்த குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் வான்வழியாக வந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்காக 50 பாரா கிளைடர்களை தீவிரவாதிகள் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்திய விமானத்தை கடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
எனவே, இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கொடியேற்றும் ராஜபாதையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையின் 71 ஆயிரம் போலீசார் நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.  

தீவிரவாதிகள் வான்வழியாக வந்து தாக்குதல் நடத்துவதை முறியடிப்பதற்காக, விமான எதிர்ப்பு பீரங்கிகளும், போர் விமானங்களும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.  

அணிவகுப்பு பாதைக்கு மேலே ஹெலிகாப்டர்கள் பறந்தபடி கண்காணிப்பில் ஈடுபடும். அணிவகுப்பை பார்வையிட வரும் பொதுமக்களை கண்காணிக்க நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

இன்று இரவு முதல் நாளை பகல் 1.30 மணிவரை, டெல்லி நகர எல்லைகள் மூடப்படுகிறது. 


Related National News


Republic Day Celebration Special Photo Gallery

Republic Day Celebrations At Chennai
Republic Day Rare Photo Gallery