டெல்லி: மத்திய ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி இன்று 2010-11ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். இது மக்களுக்கான பட்ஜெட் என அறிவித்துள்ளார் மம்தா பானர்ஜி.
எனவே பயணிகளை அதிகம் பாதிக்காத வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சரக்குக் கட்டணத்தில் ஓரளவு உயர்வு இருக்கலாம் எனத் தெரிகிறது.
உணவு தானியம், உரம் போன்ற முக்கிய பொருட்களின் சரக்குக் கட்டணம் உயர்த்தப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றை உயர்த்தினால் விலைவாசி உயர்வு மேலும் கடுமையாகி விடும் என்ற அச்சமே இதற்குக் காரணம்.
அதேசமயம், சிமென்ட், இரும்புத் தாது, நிலக்கரி ஆகியவற்றுக்கான சரக்குக் கட்டணம் உயரக் கூடும்.
மமதாவின் செல்லத் திட்டமான டூரன்டோ (எங்கும் நிற்காமல் செல்லும் அதி வேக ரயில்) எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேலும் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.
சமாதான் - கலாச்சார் எக்ஸ்பிரஸ்கள்
பட்ஜெட்டில் பல புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு இடம் பெறவுள்ளது. முக்கியமாக சமாதான் எக்ஸ்பிரஸ், கலாச்சார் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதிதாக இரு ரயில்கள் விடப்படவுள்ளன.
சமாதான் எக்ஸ்பிரஸ் ரயில் காஷ்மீர்- கன்னியாகுமரி இடையிலானது. இந்தியாவின் முக்கிய கலாச்சார பெருமை வாய்ந்த சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையிலான எக்ஸ்பிரஸ் ரயிலாக கலாச்சார் ரயில் இருக்கும்.
நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் சரக்கு ரயில் போக்குவரத்துக்கு தனி பாதை அமைக்கப்பட்டு வருகிறது. டெல்லியை, கொல்கத்தா மற்றும் மும்பையுடன் இணைக்கும் கிழக்கு - மேற்கு சரக்கு ரயில் பாதை அமைக்கும் பணி விரிவுபடுத்தப்படுகிறது. அதன்படி மும்பை கொல்கத்தாவுடனும், சென்னை மங்களூருடனும் இணைக்கப்படும்.
தற்போது நாட்டின் சரக்கு போக்குவரத்தில் 70 சதவீதம் நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வருகிறது. சாலைப்போக்குவரத்துடன் போட்டி போடும் வகையில் சரக்கு கட்டண விகிதங்கள் சீரமைப்பு, உணவு தானியங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது.
டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 50 ரயில் நிலையங்கள், சர்வதேச அளவிலான ரயில் நிலையங்களுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு மேலும் பல புதிய மையங்கள் தொடங்கப்படுவதுடன், தட்கல் டிக்கெட் திட்டம் பயணிகளுக்கு சுமையில்லாமல் மாற்றியமைக்கப்படும்.
ரயில் நிலையங்களில் விவரங்களை அறிந்துகொள்வதற்காக புதிய டெலிபோன் எண் (138) அறிமுகம் குறித்த அறிவி்ப்பு இடம் பெறும்.
ரயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படுவதுடன் முற்றிலும் பெண்களை கொண்ட தனி பாதுகாப்பு படை அமைப்பது.
விவசாய விளைபொருட்களை கொண்டு செல்வதற்காக புதிய ரயில்கள் அறிமுகம்.
புதிய ரயில் பாதைகள் அமைக்கும் பணியில் தனியாருக்கு பங்களிப்பு போன்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகலாம்.
ரயில்வே சிறப்பு பாதுகாப்பு நிதியை உருவாக்கும் அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Related National News:
Union Budget 2009: Pranab Mukherjee'Tamilnadu Budget-2008 Leads The Entire Country In The
Right Path' - Minister StalinChidambaram Speaks On The Budget Highlights