ஜேபிஜே ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. தப்பி ஓடிய இந்த நிறுவன அதிபர் மனைவியைப் பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரில் இயங்கி வந்த ஜே.பி.ஜே. சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம், தவனை முறையில் வீட்டு மனைகளை விற்பனை செய்வதாக கூறி, 10-க்கும் மேற்பட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது. இதை நம்பி தமிழகம் முழுவதும் உள்ள இந்நிறு வனத்தின் கிளைகளில் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு பணம் கட்டினர்.
ஆனால் உறுதி அளித்தப்படி செயல்படாமல் ஜே.பி.ஜே. நிறுவனம் மோசடி செய்து விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறினர்.
1000கோடி ரூபாய் வரை ஜே.பி.ஜே. நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர்.
இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜஸ்டின் தேவதாசை மீண்டும் கைது செய்து போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜஸ்டின் தேவதாசை 13நாள் காவலில் எடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் சொத்துக்களை கணக்கெடுக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக பத்திரபதிவு அலுவலகங்களில் தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். ஜே.பி.ஜே. நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களையும் முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மனைவி தப்பி ஓட்டம்...
இதற்கிடையே ஜஸ்டின் தேவதாசின் மனைவி பெல்லாவையும் இந்த வழக்கில் போலீசார் முக்கிய குற்றவாளியாக சேர்த்துள்ளனர். போலீஸ் தேடுவதை அறிந்ததும் அவர் தலைமறைவாகிவிட்டார். தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tamil Nadu News:
ரியல் எஸ்டேட் மோசடி... பிரபல நிறுவனம் ரூ 1000 கோடி சுருட்டல்! மோசடிப் பேர்வழி ஜஸ்டின் தேவதாஸ் சென்னை கொண்டு வரப்படுகிறார்!!ராமலிங்க ராஜூவின் மோசடி மதிப்பு ரூ 14000 கோடி! - சிபிஐ