'எந்த வம்பும் வேணாஞ்சாமி... நாம பாட்டுக்கு நம்ம ரூட்டுல வண்டிய ஓட்டிக்கிட்டு போய்டுவோம்' என்ற பாதுகாப்பான முடிவுக்கு வந்துவிட்ட வடிவேலுவின் காட்டில் அடைமழை... அத்தனையும் பணமழை.
மனிதர் முன்னிலும் பக்குவமாக வேறு பேசக் கற்றுக் கொண்டதால், அவரைப் பார்க்கப் போய் வரும் தயாரிப்பாளர்கல் எல்லாம் வடிவேலு புராணமாகப் பாடுகிறார்கள்.
'எதிரில் நிற்கக் கூட ஒத்த எதிரி இல்லியேய்யா... என்ன பண்ணீங்க?' என்று பத்திரிகையாளர்களிடம் இணக்கமாகப் பேசும் வடிவேலு, 'என்னயப் பத்தி பத்திரிகைக்காரவுங்க எழுதாததாப்பு... எல்லாம் அப்பிடியே விலக்கித் தள்ளிட்டு போய்க்கிட்டே இருக்கணும்... இந்தா நிக்கிறாரே எங்கண்ணன்(பிரபல பத்திரிகையின் நிருபர்)... இவரால எனக்கு ஏகப்பட்ட தொல்லை. அம்புட்டு எழுதிட்டார்... இருந்தாலும் தாயா புள்ளையா இருக்கோம்... நாளப் பின்னால ஒருத்தர ஒருத்தர் பாக்கணும்... இந்த கோடம்பாக்கம் சின்ன ஊருண்ணே... எங்கிட்டுச் சுத்தினாலும் திரும்ப இங்கிட்டுதான் வந்து முட்டிக்கிட்டு நிக்கணும். இதுல என்ன சண்டை. ஆனா ஒண்ணு... நீங்க எழுதி நான் வளர்ந்திருக்கேன். தாழ்ந்துடல. அதுக்காக எப்பவும் நன்றியோட இருப்பேன்யா!" என்று நெகிழ வைக்கிறார் மனிதர்.
இதே மனிதர் இந்திரலோகத்தில் அழகப்பன் படத்தின் போது பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்து பிராண்டினார். ஒருமுறை கரண் படத்தின் ஷூட்டிங்கில் பத்திரிகையாளர்கள் வந்துவிட்டதால் கோபப்பட்டு, பேக் சொன்னவர்தான் இவரும். ஆனால் இன்று...
அத்தனை வாஞ்சையுடன் பேசுகிறார். பேச்சுதானே கோடம்பாக்கத்தின் முதல் சொத்து.. இன்று கிட்டத்தட்ட 20 படங்களில் வடிவேலு!
மனிதன் பக்குவப்படுவது அனுபவங்களால்தான் என்பதற்கு வடிவேலு ஒரு உதாரணம்.