Home Tamil News Entertainment News நார்வே தமிழ் திரைப்பட விழா 2010... சசிகுமார், ஜனநாதன், மிஸ்கின், சமுத்திரக்கனி பங்கேற்பு


Illinois Institute Of Technology

Latest News:

நார்வே தமிழ் திரைப்பட விழா 2010... சசிகுமார், ஜனநாதன், மிஸ்கின், சமுத்திரக்கனி பங்கேற்பு

February 08, 2010 15:05:44

முழுக்க முழுக்க தமிழ்ப் படங்கள் மட்டுமே பங்கேற்கும் 'நார்வே தமிழ் திரைப்பட விழா 2010' பிப்ரவரி 6 முதல் 9-ம் தேதி வரை நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடக்கிறது.

இந்த விழாவில் சுப்பிரமணியபுரம், பூ, மாயாண்டிக் குடும்பத்தார், போராண்மை, யோகி, நாடோடிகள் உள்பட 13 தமிழ் திரைப்படங்கள் பங்கேற்கின்றன.

மிஷ்கின் இயக்கிய நந்தலாலா திரைப்படம் முதல் முறையாக இந்த விழாவில் கலந்து கொள்கிறது. வெளியுலகின் பார்வைக்கு இந்தப் படம் இப்போதுதான் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு நாட்கள் நடக்கும் இந்த திரைவிழாவில் பங்கேற்க தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குனர்களான, எஸ்.பி.ஜனநாதன், சசிக்குமார், மிஷ்கின் மற்றும் சமுத்திரகனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மோசர் பேர் நிறுவனத்தின் சிஇஓ தனஞ்செயன், திரைப்பட இசையமைப்பாளர் விஎஸ் உதயா ஆகியோரின் ஒத்துழைப்பு மற்றும் உதவியுடன் இந்த திரைவிழா நடக்கிறது.



இந்த விழாவை ஏற்பாடு செய்திருப்பவர் வசீகரன் சிவலிங்கம். நார்வே தமிழரான இவரது விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் என்ற நிறுவனம் விழாவை முன்னின்று நடத்துகிறது.

இதுகுறித்து வசீகரன் சிவலிங்கம் கூறுகையில், "தமிழ் திரையுலகம் ஒவ்வொரு வருடமும் புதிய சாதனைகளை படைத்தது முன்னேறி வருகிறது. ஒரு வருடத்திற்கு நூறு படங்கள் வெளிவரும் நிலையிலிறிந்து முன்னேறி, 2009-இல் 131 திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. தமிழர்கள் வாழ்விலும், உலகத் தமிழர்களின் கலாச்சாரத்தோடும் ஒன்றாகக் கலந்து விட்ட தமிழ் சினிமா, உலகத்தின் விழித் திரைகளில் மெல்ல மலரத் தொடங்கி உள்ளது.
 
தமிழ் சினிமா சர்வதேச திரைப்பட விழாக்களில் அதிக அளவில் பங்கேற்கத் தொடங்கியுள்ளன. ஈரான் திரைப் படங்களுக்கு நிகராகவும், ஆங்கிலத் திரைப்படங்களின் தரங்களைத் தொடும் அளவிற்கு தொழில் நுட்பம் தமிழ் சினிமாவிலும் நிறைந்துள்ளது.

இன்று தமிழ் மக்களின் முக்கிய பொழுதுபோக்காக திரைப்படங்கள்தான் என்ற நிலை உருவாகி உள்ளது. அதற்கு காரணம், தமிழ் படங்களின் உயர்ந்து வரும் தரம் மற்றும்  மக்களின் வாழ்க்கை நெறி முறையில் அவைகள் ஆற்றும் முக்கிய பங்கு. தமிழ் சினிமாவின் வியாபாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களும் இருக்கிறார்கள்.
 
இப்படியான ஒரு சூழலில் தரமான கதைகளை கொண்ட தமிழ்ப்படங்களை உலகத் திரையரங்குகளில் திரையிடுவதற்கான முன் முயற்சியாகவும், தமிழ்ப் படங்களை வேற்று நாட்டு இனத்தவர்கள் பார்த்து மகிழவும்,  நார்வேயில் முதல் முறையாக தமிழ் திரைப்பட விழா அரங்கேறுகிறது. உலகத்தில் எத்தனை திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழர்களால் நடாத்தப்படும் தனிப் பெரும் விழாவாக இது மாறும் என நம்புகின்றேன்.

இத் திரைப்பட விழாவை நைர்வேயில் ஆரம்பித்து வைப்பதில், நார்வேயில் வாழ்கின்ற தமிழர்களான நாங்கள் பெருமை அடைகிறோம்.

இத்திரைப்பட விழாவை முன் நின்று நடத்துவதில் வி.என்.மியூசிக் டிரீம்ஸ் நிறுவனம் மகிழ்ச்சியடைகின்றது. 

இந்த விழாவின் நிறைவு நாளான அன்று பார்வையாளர்கள் தேர்வு செய்கின்ற திரைப்படங்கள், நான்கு வகையான விருதுகளைப் பெறப்போகின்றன..." என்றார்.

நார்வேயில் தமிழ்ப் படைப்பாளிகள் ஜனநாதன், சசிகுமார், சமுத்திரக்கனி, மிஷ்கின்!

இதற்கிடையே, தமிழ் இயக்குநர்கள் எஸ்பி ஜனநாதன், சசிகுமார், சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் திரைப்பட விழாவில் பங்கேற்க நார்வே சென்றனர். 

ஆஸ்லோ விமான நிலையத்தில் அவர்களை வரவேற்று அழைத்துச் சென்றார் விழா அமைப்பாளர் வசீகரன். 

ஏராளமான தமிழ் பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

இந்த விழா பற்றி இயக்குநர் சசிகுமார் கூறுகையில், "எனக்கு புதிய படத்தின் ஷூட்டிங் இருந்ததால் இந்த விழாவுக்கு போக முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் தமிழர்களுக்காக தமிழர்களால் நடத்தப்படும் முழு தமிழ் திரைப்பட விழா இது என்பதைக் கேட்டதும், நான் வந்துவிட்டேன். இதைக் கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. 

சுப்பிரமணியபுரம் மற்ற படவிழாக்களில் பங்கேற்றதற்கும், இங்கே பங்கேற்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இத்தாலி பச விழாவில் கூட, சுப்பிரமணியபுரம் படம் மற்ற மொழிப் படங்களோடு சேர்த்து திரையிடப்பட்டது. ஆனால் தமிழுக்கென்றே தனி சர்வதேசப் படவிழா இங்குதான் நடக்கிறது. அதில் பங்கேற்பதில் முழுமையான நிறைவு கிடைத்துள்ளது" என்றார்.

இயக்குநர் சமுத்திரக் கனி கூறுகையில், "நார்வேயை நான் வரைபடத்தில் பார்த்தோடு சரி. இப்போதுதான் நேரில் பார்க்கிறேன். பொதுவாக ஒரு தமிழ்ப்படம் மலேஷியா சிங்கப்பூரைத் தாண்டாது என்றுதான் நினைத்திருந்தோம். இங்கே வந்து பார்த்தால் நமது படங்களை எந்த அளவு உலகத் தமிழர்கள் ரசிக்கிறார்கள் என்று தெரிகிறது.

நமது சொந்தங்களைப் பார்க்க வந்திருக்கும் மகிழ்ச்சி எனக்கு. இந்த நாட்டில் வசிக்கும் நம்ம சொந்தங்களைப் பார்த்து, அவர்கள் மத்தியில் எங்கள் படைப்புகளைப் பற்றி விவாதிக்க இத்தனைப் பெரிய வாய்ப்பை வழங்கிய என் நண்பன் வசீகரனுக்கு நன்றிகள். ரசிகர்களாகிய நீங்கள் உங்கள் எதிர்ப்பார்ப்பைச் சொல்லுங்கள்... அதை அடுத்த படவிழாவுக்கு வரும்போது நிவர்த்தி செய்ய முயல்கிறோம்" என்றார்.

கனடாவில் வசிக்கும் தமிழரான எஸ் லெனின் இயக்கிய 1999 என்ற திரைப்படம் இந்த விழாவில் திரையிடப்பட்டது. இந்தப் படத்தைப் பார்த்த ஜனநாதன், சசிகுமார், சமுத்திரக் கனி மற்றும் மிஷ்கின் வெகுவாகப் பாராட்டினர்.


இந்த விழாவில் பங்கேற்ற திரைப்படங்கள் விவரம்: 


விழாவில் திரையிடப்படவுள்ள படங்கள்:

பிப்ரவரி 6, 2010

10.00 காலை - மாயாண்டி குடும்பத்தார்
13.00 பிற்பகல் - பேராண்மை
16.00 மாலை - அஞ்சாதே
19.00 மாலை - பொக்கிஷம்
21.40 இரவு  - பூ

பிப்ரவரி 7

11.00 காலை - மீண்டும் (நோர்வேயில் எடுக்கப்பட்ட திரைப்படம்)
13.00 பிற்பகல் - ஈ
16.00 மாலை - 1999  (கனடாவில் எடுக்கப்பட்ட திரைப்படம்)

பிப்ரவரி 8

13.00 பிற்பகல் - சுப்ரமணியபுரம்
16.00 மாலை - யோகி
19.00 மாலை - பசங்க
21.40 இரவு - நாடோடிகள்

பிப்ரவரி 9
16.00 மாலை - நந்தலாலா
விழா நிறைவு நிகழ்ச்சிகள். 


திரையிடப்படும் இடம்: ஃபில்மென்ஷஸ் கினோ

தொடர்புக்கு: வசீகரன் சிவலிங்கம், 0047 913 70 728

Related Entertainment News
:

International Red Carpet For Rahman And Gulzar
துபாய் சர்வதேச திரைப்பட விழாவுக்கு 'யோகி' தேர்வு!
Pa. Vijay's 'Gnabagangal' Goes To Cannes Film Festival