Home Tamil News Tamil Nadu News விடுதலையாகிறார் நளினி!


Illinois Institute Of Technology

Latest News:

விடுதலையாகிறார் நளினி!

January 21, 2010 13:19:07

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நளினி விரைவில் விடுதலையாகிறார். அவரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி மனித வெடி குண்டால் படுகொலை செய்யப்பட்டார். 

இது தொடர்பாக இலங்கை வாலிபர் முருகன், சென்னையைச்சேர்ந்த அவரது மனைவி நளினி உள்பட 25 பேர் 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.  தனிக்கோர்ட்டில் நடந்து வந்த விசாரணையில் 1998-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி  நளினி உள்பட 25 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
 
இதைஎதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு நளினி உள்பட 4 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
 
நளினி இதை எதிர்த்து கருணை மனு தாக்கல் செய்தார். மத்திய அரசு அதை பரிசீலனை செய்து நளினிக்கு ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதேபோல் ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
 
14 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்ததால் தன்னை விடுதலை செய்யுமாறு ஐகோர்ட்டில் நளினி சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
 
தண்டனை காலம் முடிந்த நிலையில் தன்னை விடுதலை செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யும் அறிவுரை கழகம் அமைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் நளினி மனுதாக்கல் செய்தார்.
 
இதையடுத்து அறிவுரை கழகம் அமைத்து விசாரணை செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி வேலூர் கலெக்டர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி, சிறை கண்காணிப்பாளர், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் ஆகியோரை கொண்ட அறிவுரை கழகம் அமைக்கப்பட்டது.
 
வேலூர் கலெக்டர் ராஜேந்திரன், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கலையரசன், சிறை கண்காணிப்பாளர் சேகர், மண்டல நன்னடத்தை அலுவலர் கிருஷ்ண நாமகிரி,  நன்னடத்தை அலுவலர் பியூலா ஆகியோர் நேற்று மாலை வேலூர் ஆண்கள் சிறையில் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மற்றும் மேலும் பல்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற 8 ஆயுள் தண்டனை கைதிகளிடம் விசாரணை செய்தனர்.
 
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ந்து நடந்த விசாரணையின் போது கைதிகளின் நன்னடத்தை மற்றும் எத்தனை ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது உட்பட பல தகவல்கள் குறித்து விசாரணை செய்துள்ளனர்.
 
இதைத் தொடர்ந்து வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினியிடம் இக்குழுவினர் விசாரணை செய்தனர்.
 
பின்னர் கலெக்டர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், "வேலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் சிறையில் 14 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 11 பேரிடம் விசாரணை செய்தோம். இது தொடர்பான அறிக்கையை அரசுக்கு விரைவில் அனுப்பி வைப்போம்.
 
அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளின்படியும், அறிவுரைகளின் படியும் தண்டனை கைதிகளிடம் விசாரணை செய்துள்ளோம்..." என்றார். 

எனவே நளினி விடுதலையாகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

Related TamilNadu News:

நளினி உண்ணாவிரதம் வாபஸ்
விடுதலை செய்ய முதல்வருக்கு நளினி கடிதம்