Home Tamil News Tamil Nadu News ஜெயராம் வீடு-அலுவலகம் எரிப்பு... நாம் தமிழர் இயக்கத்தினர் கைது
  

Latest News:

ஜெயராம் வீடு-அலுவலகம் எரிப்பு... நாம் தமிழர் இயக்கத்தினர் கைது

February 06, 2010 10:24:59

சென்னை: தமிழ் பெண்களை கறுத்துத் தடித்த எருமைகள் என்று கிண்டலடித்த நடிகர் ஜெயராமின் சென்னை வீட்டுக்கு சிலர் தீவைத்தனர். ஜன்னல்களை அடித்து உடைத்தனர். வாசலில் இருந்த காரையும் அடித்து நொறுக்கினர். இது தொட்ரபாக நாம் தமிழர் அமைப்பைச் சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


நடிகர் ஜெயராம் மலையாளஏசியாநெட் டி.வி. ஒன்றுக்கும், தமிழ் வாரப் பத்திரிகை ஒன்றுக்கும் கொடுத்த பேட்டியில், தமிழ்ப் பெண்களைப் பற்றி இழிவான கருத்தை கூறியிருந்தார். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.

இதற்கிடையில், சமூக நீதி பேரவை அமைப்பின் பெண்கள் பிரிவு மாநில பொறுப்பாளர் வக்கீல் ஏ.இந்திராணி, நடிகர் ஜெயராம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து இருக்கிறார். சென்னை எழும்பூர் 14-வது கோர்ட்டில் அவர் சார்பில், வக்கீல் கே.பாலு இந்த வழக்கை தொடர்ந்து இருக்கிறார். இந்த மனு மீதான விசாரணை 10-ந் தேதி நடைபெறகிறது.

நடிகர் ஜெயராமின் வீடு சென்னை வளசரவாக்கம் ஜானகிநகர் லட்சுமி தெருவில் உள்ளது. நேற்று மாலை 6 மணி அளவில் 25 பேர் கொண்ட கும்பல் கையில் தீப்பந்தம், கற்கள், உருட்டுக் கட்டைகளுடன் ஜெயராமின் வீட்டிற்கு சென்றனர். வீட்டு முன்பு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 போலீசார் காவலுக்கு இருந்தனர்.

தீப்பந்தத்துடன் சென்ற கும்பல் முதலில் பெட்ரோல் ஊற்றி தீப்பந்தம் கொளுத்தி அதைக் காட்டி போலீசாரை பின்வாங்க வைத்து உள்ளே புகுந்துள்ளனர். தடுக்க முயன்ற போலீசாருக்கும் உதை விழுந்தது. அவர்கள் முற்றிலும் தள்ளி நிற்க 
உடனே அந்த கும்பல், வீட்டு காவலாளியை அடித்து தள்ளிவிட்டு திபுதிபுவென்று உள்ளே புகுந்தனர்.  

பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் வீட்டின் முன்பக்கத்தில் உள்ள நடிகர் ஜெயராமின் அலுவலகத்திற்குள் தீப்பந்தத்தை வீசினார்கள். கதவு, ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்தனர். அலுவலகத்தில் உள்ள சோபா போன்ற பொருட்களும், இதர பொருட்களும் கொழுந்துவிட்டு எரிந்தன.


பின்னர், வீட்டின் முன்பக்கம் இருந்த 5 அடி உயர பிள்ளையார் சிலையை அடித்து உடைத்தனர். வீட்டின் மெயின் கதவையும் அடித்து நொறுக்கினார்கள். பின்னர், வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த சாமி படம் மற்ற அலங்கார பொருட்களை அடித்து சேதப்படுத்தினார்கள்.

அடுத்தபடியாக வீட்டின் முன்பு இருந்த ஹூண்டாய் சொகுசு காரையும் உருட்டு கட்டையால் அடித்து நொறுக்கினார்கள். சுமார் ஒரு மணி நேரம் வீட்டை சூறையாடினார்கள். காவலுக்கு இருந்த போலீசார் வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய கும்பல், 'தமிழ் வாழ்க. தமிழன் வாழ்க. தமிழச்சியை இழிவு படுத்தியவர்களை சும்மா விடமாட்டோம். தமிழ் விரோதி ஜெயராமை ஒழிப்போம்' என்பன போன்ற கோஷங்களை முழங்கினார்கள்.  அலுவலகம் தீப்பிடித்து எரிந்ததால் ஒரே புகைமூட்டமாக இருந்தது. அங்கு என்ன நடக்கிறது என்றே வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியவில்லை.


இதையடுத்து, தகவல் தெரிந்து கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், இணை கமிஷனர் சக்திவேலு, துணை கமிஷனர்கள் பெரியய்யா, மவுரியா, உதவி கமிஷனர்கள் மனோகரன், கண்ணபிரான், பரந்தாமன் ஆகியோர் போலீஸ் படையுடன் விரைந்து சென்றனர்.


நாம் தமிழர் இயக்கத்தினர் 8 பேர் கைது

போலீசாரை பார்த்ததும் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் தப்பி ஓடினார்கள். அவர்களை விரட்டிச் சென்று போலீசார் பிடித்தனர். 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் டைரக்டரும், நடிகருமான சீமானின் நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று போலீசார் கூறினார்கள்.

பால முரளி (வயது 26). சதீஷ்குமார் (25), டேவிட் பெரியார் (28), அதியமான் (41), இளந்தேவன் (35), தமிழ் செரியன் (34), இன்னொரு டேவிட் (37), மணிகண்டன் (29).

மற்றவர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி, கொலை மிரட்டல் மற்றும் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நடந்தபோது நடிகர் ஜெயராம் வீட்டில் இல்லை. அவர் கேரளாவில் படப்பிடிப்பில் இருந்தார். ஜெயராமின் மனைவியும், நடிகையுமான பார்வதி என்ற அசுவதி, ஜெயராமின் 70 வயது தாயார் தங்கம், மகள் 8-வது படிக்கும் மாளவிகா, வேலைக்கார பெண்கள் கோகிலா, லட்சுமி, சரோஜா ஆகியோர் வீட்டில் இருந்தார்கள்.  

தாக்குதல் சம்பவத்தால் பயந்துபோய் அவர்கள் படுக்கை அறைக்குள் கதவை பூட்டிக் கொண்டு உட்கார்ந்துகொண்டனர். சம்பவம் முடிந்த பிறகு டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் தியாகராஜன் ஆகியோர் வந்து ஜெயராமின் மனைவியிடம் நடந்த சம்பவத்தை கேட்டறிந்து ஆறுதல் கூறினார்கள். தொடர்ந்து நடிகர் ஜெயராம் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
Related TamilNadu News:

தமிழ்ப் பெண்களை இழிவாகப் பேசிய ஜெயராமுக்கு கடும் கண்டனம்
இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்கிறேன்! - ஜெயராம்
VFX Magic To Turn Kushbu And Jayaram As Teens