Home Tamil News Tamil Nadu News எம்ஜிஆர் தேடிய தலைவி நானே! - ஜெ


Illinois Institute Of Technology

Latest News:

எம்ஜிஆர் தேடிய தலைவி நானே! - ஜெ

January 28, 2010 13:57:22

சென்னை: அதிமுகவுக்கு தலைமை தாங்க எம்.ஜி.ஆர். தேடிய தலைவி நானே. அதனால் ராமன் தேடிய சீதை படத்தில், என்னைப் பார்த்து "திருவளர்ச் செல்வியோ! நான் தேடிய தலைவியோ!" என்று மிகத் தெளிவாக, என்னைப் பற்றி எம்.ஜி.ஆர். பாடியிருக்கிறார் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.


அதிமுக நிர்வாகிகள் 6 பேரின் இல்லத் திருமண விழா சென்னை அருகேயுள்ள வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடந்து. திருமணங்களை நடத்தி வைத்து ஜெயலலிதா பேசுகையில்,

மகிழ்ச்சிக்குரியது மண வாழ்க்கை. இது கடவுள் அளித்த வெகுமதி. மனிதர்கள் தனித்து வாழ முடியாது. எனவேதான், குடும்பம், நட்பு, உறவு என்ற பாசக் கயிற்றால் பிணைப்பட்டு வாழ்கிறோம்.

மணமக்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரிடத்திலும் ஒற்றுமையை கடைப்பிடித்து, விட்டுக் கொடுத்து, உறுதியுடன் வாழவேண்டும். இன்பமும், துன்பமும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. துன்பங்களை எதிர்கொள்வதும், வெல்வதும்தான் வாழ்வின் சுவை. அதுதான் வாழ்க்கையை வளப்படுத்தும்.

அண்மையில் சட்டப் பேரவையில் பேசிய நான், "ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே" என்று 'பணத்தோட்டம்' படத்தில் எம்.ஜி.ஆர். பாடிய பாடல் வரிகளை நினைவுகூர்ந்து பேசினேன்.

பேரறிஞர் அண்ணாவை மனதில் வைத்துதான் எம்.ஜி.ஆர். அவ்வாறு பாடினார். ஆனால் "தலைவன் இருக்கிறான்" என்று பாடியது தன்னைப் பற்றிதான் என்று கருணாநிதி கூறியிருக்கிறார்.

மேலும் "ஒரு தலைவி இருக்கிறார்" என்று எம்.ஜி.ஆர். பாடவில்லை என்றும் கருணநிதி குறிப்பிட்டுள்ளார். 1963ம் ஆண்டு நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எம்.ஜி.ஆர். என்னைப் பற்றி எவ்வாறு பாடியிருக்க முடியும்?.

எனினும், என்னையே தலைவி என்று தெளிவாகக் குறிப்பிட்டு எம்.ஜி.ஆர். பின்னர் பாடினார். நானும், எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த 'ராமன் தேடிய சீதை' என்ற படத்தில், என்னைப் பார்த்து "திருவளர்ச் செல்வியோ! நான் தேடிய தலைவியோ!" என்று மிகத் தெளிவாக, என்னைப் பற்றி எம்.ஜி.ஆர். பாடியிருக்கிறார்.

அதிமுகவுக்கு தலைமையேற்று, அவரது பணியை நான் தொடர வேண்டும் என்பதற்காகவே எம்.ஜி.ஆர். அந்த பாடலை பாடியுள்ளார்.


அழிக்க முடியாது!

2011ல் அதிமுக இருக்காது என்று திமுகவினர் பேசி வருகின்றனர். 2011 வரட்டும். யார் வெல்லப் போகிறார்கள்? யார் இருக்கும் இடம் தெரியாமல் ஓடப் போகிறார்கள்? என்பதைப் பார்க்கத்தான் போகிறோம்.

அதிமுகவை அழிக்கக்கூடிய சக்தி, இன்னும் இந்த உலகில் தோன்றவில்லை. அதிமுக என்றும் பதினாறு. அதிமுகவை எந்தக்காலத்திலும், யாராலும் அழிக்க முடியாது.

தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சி அமைய அதிமுகவினர் ஒற்றுமையாக உழைக்க வேண்டும். அதிமுக ஆட்சி அமையும் நன்னாளை தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஆவல் விரைவில் நிறைவேறும்" என்றார் ஜெயலலிதா.

Related Tamil Nadu News:

நான் முதல்வராக எம்ஜிஆர் காரணம்! - கருணாநிதி
கலைஞரும் சிவாஜியும் இரட்டைக்குழல் துப்பாக்கி: பிரபு
எம்ஜிஆர் - சிவாஜிக்கு கிடைக்காத பாக்கியம் எனக்கும் கமலுக்கும் கிடைத்தது! - ரஜினி