Home Tamil News National News பாராளுமன்றத்தில் தமிழில் பேச நடவடிக்கை! - சபாநாயகர் மீராகுமார்


Illinois Institute Of Technology

Latest News:

பாராளுமன்றத்தில் தமிழில் பேச நடவடிக்கை! - சபாநாயகர் மீராகுமார்

February 08, 2010 09:07:11

சென்னை: பாராளுமன்றத்தில் தமிழில் பேச விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து மத்திய அமைச்சர் மு.க.அழகிரியைச் சந்திக்க ஆவலுடன் உள்ளேன், என்று சபாநாயகர் மீராகுமார் கூறினார்.


பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் நேற்று பிற்பகல் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவரை தமிழக சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பன் உள்பட பலர் வரவேற்றனர். 

அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சபாநாயகராக பதவி ஏற்றபின் முதல் முறையாக சென்னைக்கு வருகிறேன். இங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளேன்.

பாராளுமன்றத்தில் தான் தமிழில் பேச அனுமதிக்கும்படி கேட்பது தொடர்பாக, மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை மந்திரி மு.க.அழகிரி உங்களை சந்தித்து பேச இருப்பதாக கூறியுள்ளாரே?

ஏற்கனவே மத்திய மந்திரி மு.க.அழகிரி என்னை சந்திக்க நேரம் கேட்டு இருந்தார். அவரை சந்திக்க நானும் காத்திருந்தேன். ஆனால் அவர் வரவில்லை. அவர் எப்போதும் வரலாம். அடுத்த வாரம் அவர் என்னை சந்திக்க நேரம் கேட்டு இருக்கிறார். அவருடைய வரவுக்காக காத்திருக்கிறேன். என்னை சந்தித்து அவருடைய குறைகளை தெரிவிக்கலாம். அவரை சந்தித்தபின் அவரது பிரச்சினைகளை தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பாராளுமன்ற கூட்டத்தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்க உள்ளதே?


வருகிற 22-ந் தேதி நடக்க உள்ள பாராளுமன்ற கூட்டத்தொடர் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ரெயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட்கள் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன. இவை தவிர வேறு பல முக்கிய மசோதாக்களும் நிறைவேற்றப்பட உள்ளன. அதிக முக்கியத்துவம் நிறைந்த கூட்டத்தொடராக இது இருக்கும்.

பாராளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்கட்சிகள் ஒத்துழைப்பார்களா?

முக்கியத்துவம் நிறைந்த இந்த கூட்டத்தொடர் சுமுகமாகவும், ஆக்கபூர்வமாகவும் நடைபெற அனைத்து கட்சிகளும் குறிப்பாக எதிர்கட்சிகள் பூரண ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தனி தெலுங்கானா கோரி எம்.பி.க்கள் ராஜினாமா செய்து உங்களிடம் கடிதம் தந்து உள்ளார்களே? அவை ஏற்றுக்கொள்ளப்படுமா?


தெலுங்கானா கோரி எம்.பி.க்கள் ராஜினாமா கடிதம் தந்து உள்ளனாë. ஆனால் அவர்களில் சிலரது கடிதம் முறைப்படி இல்லை. ஆகவே அந்த ராஜினாமா கடிதங்கள் நிராகரிக்கப்படும். முறைப்படி வந்துள்ள கடிதங்கள் மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளன. விரைவில் அந்த கடிதங்கள் மீது உரிய முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு மீராகுமார் கூறினார்.

Related National News:

பாராளுமன்றத்தில் விரைவில் எனது தமிழ்க்குரல் ஒலிக்கும் - முக அழகிரி
பார்லிமெண்டில் அழகிரி மனு அளித்ததாக பரபரப்பு
Parliament Constrains DMK Ministers To Converse In Tamil