Home Tamil News National News பாபர் மசூதி இடிப்புக்கு ஆர்எஸ்எஸ் - பாஜ தலைவர்களே காரணம்! - லிபரான் அறிக்கை
Illinois Institute Of Technology

Latest News:

பாபர் மசூதி இடிப்புக்கு ஆர்எஸ்எஸ் - பாஜ தலைவர்களே காரணம்! - லிபரான் அறிக்கை

November 24, 2009 19:56:56



புதுடெல்லி: பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு அப்போதைய உத்தரப் பிரதேச பாஜக முதல்வராக இருந்த கல்யாண் சிங், ஆர்எஸ்எஸ் முன்னாள் தலைவர் சுதர்ஷன், உமா பாரதி போன்றவர்கள் தான் முக்கியமான காரணம் என்று லிபரான் கமிஷன் குற்றம் சுமத்தியுள்ளது.

அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த லிபரான் கமிஷன் அமைக்கப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளாக லிபரான் விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்தார். அந்த அறிக்கையை கடந்த ஜூன் மாதம் அவர் மத்திய அரசிடம் அளித்தார்.
 
லிபரான் கமிஷன் அறிக்கையை தற்போது நடந்து வரும் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந்த நிலை யில் லிபரான் கமிஷன் அறிக்கையின் ஒரு பகுதி நேற்று டெல்லியில் இருந்து வெளியான ஒரு ஆங்கில பத்திரிகையில் வெளியானது. 

பத்திரிகைக்கு இந்த அறிக்கையின் ரகசியம் கசிந்தது எப்படி என்ற சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது அவை மீறல் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
லிபரான் கமிஷன் அறிக்கையில், பாபர் மசூதி இடிப்புக்கு வாஜ்பாய், அத்வானி ஆகியோரே காரணம் என்று நேரடியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பா.ஜ.க. எம்.பி.க்களின் அமளியால் நேற்று பாராளுமன்ற இரு சபைகளையும் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

பாராளுமன்றத்தில் தாக்கல்! 

இதையடுத்து லிபரான் கமிஷன் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது. இன்று மதியம் 12 மணிக்கு பாராளுமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்து விடலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முடிவுக்கு வந்தனர்.

இன்று (செவ்வாய்) காலை பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பு மத்திய மந்திரி சபை கூட்டம் காலை 10 மணிக்கு நடந்தது. கூட்டத்துக்கு மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி தலைமை தாங்கினார். 

கூட்டத்தில் லிபரான் கமிஷன் அறிக்கை மீதான நடவடிக்கை அறிக்கைக்கு மந்திரி சபையின் ஒப்புதல் பெறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக லிபரான் கமிஷன் அறிக்கையும் அதன் மீது மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை அறிக்கையும் இன்றே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

12 மணிக்கு கேள்வி நேரம் முடிந்ததும் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் எழுந்து லிபரான் கமிஷன் அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அடுத்த நிமிடம் பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் எழுந்து நின்று கோஷமிட்டனர்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விஷயம் இதுதான்:

"மேலும் மசூதி இடிப்புக்கு முக்கிய காரணமான மற்றவர்கள் உமா பாரதி, சங்கர் சிங் வகேலா, கோவிந்தாச்சார்யா, சுதர்ஷன் ஆகியோர் ஆவர். இவர்கள் தான் மசூதி இடிப்பு திட்டத்தை வகுத்தவர். இவர்கள் நினைத்திருந்தால் மசூதி இடிப்பை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.

(இப்போது இந்த மூன்று தலைவர்களும் பாஜகவில் இல்லை. வகேலா காங்கிரசில் உள்ளார்).

வாஜ்பாய்-அத்வானி-ஜோஷி -ஆர்எஸ்எஸ் காரணம்!

முன்னாள் பிரதமர்  வாஜ்பாய், மூத்த பாஜக தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் போலியான மிதவாதிகள் ஆவர். தங்களை மிதவாதிகள் போல வெளியில் காட்டிக் கொண்டு, மசூதி இடிப்புக்கான சூழலை உருவாக்கினர். மசூதி இடிக்கப்படாது என்று இவர்கள் நீதிமன்றத்துக்கும், நாட்டுக்கும் தவறான உறுதிமொழிகளைத் தந்தனர்.

இவர்களால் ஆர்எஸ்எஸ் விதித்த உத்தரவை மீற முடியவில்லை. இதனால் மசூதி இடிப்புக்கு துணை போயினர்.

ஆனால், மசூதி இடிப்புக்கான திட்டத்தை வகுத்தவர்களை இவர்களால் தடுத்திருக்க முடியும்.

அயோத்தி இயக்கத்தை உருவாக்கியதும் அதை நடத்தியதும் ஆர்எஸ்எஸ் தான். ஆர்எஸ்எஸ்சும் அதனுடன் மிக நெருங்கிய பாஜகவின் மூத்த தலைவர்களுமே மசூதி இடிப்புக்குக் காரணம்.

ஆர்எஸ்எஸ்சின் இந்தத் திட்டம் வாஜ்பாய், அத்வானி, ஜோஷிக்குத் தெரியாது என்று யாரும் சொல்ல முடியாது..."

-இவ்வாறு லிபரான் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எப்படி கசிந்தது?

லிபரான் கமிஷன் அறிக்கை பத்திரிகைக்கு யார் மூலம், எப்படி கசிந்தது என்பதை சபைக்கு தெரிவிக்க வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கோஷமிட்டனர். இதனால் சபை முழுவதும் அமளியாக இருந்தது. 

மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் பா.ஜ.க. தலைவர்களின் கோரிக்கைகள் எதையும் கண்டு கொள்ளவில்லை. லோக் சபாவில் லிபரான் கமிஷன் அறிக்கையை தாக்கல் செய்த கையோடு இருக்கையில் இருந்து மேல் சபைக்கு சென்றார்.

மேல் சபையிலும் அவர் லிபரான் கமிஷன் அறிக்கையை தாக்கல் செய்தார். அங்கும் பா.ஜ.க.வினர் கோஷமிட்டனர். பா.ஜ.க. கட்சி எம்.பி.க்கள் எழுந்து ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர்.

ஏடிஆர் ரிப்போர்ட்
 
லிபரான் கமிஷன் அறிக்கை மீது அரசு எடுத்த நடவடிக்கை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. நடவடிக்கை அறிக்கையில் பா.ஜ.க. தலைவர்கள் யார் மீதும் நடவடிக்கைக்கு குறிப்பிடவில்லை என்று தெரிகிறது.
 
லிபரான் கமிஷன் அறிக்கையில் பா.ஜ.க தலைவர்கள் மீது குற்றஞ்சாட்டப் பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. லிபரான் கமிஷன் அறிக்கை பத்திரிகைக்கு கசிந்ததற்கு மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தி உள்ளார்.
Comments
  • Posted by  narayanan
    2009-11-25 19:33
    ஹாஇ