Home Tamil News Tamil Nadu News கச்சேரியில் சில்லறையாக இருந்த தமிழை மணவறையில் உட்கார வைத்த சீர்காழி! - கருணாநிதி புகழாரம்
  

Latest News:

கச்சேரியில் சில்லறையாக இருந்த தமிழை மணவறையில் உட்கார வைத்த சீர்காழி! - கருணாநிதி புகழாரம்

January 20, 2010 09:16:41

சென்னை: அந்தக் காலத்தில் கச்சேரியில் சில்லறையாக இருந்த தமிழை மணவறையில் உட்கார வைத்த பெருமை சீர்காழி கோவிந்தராஜனையே சேரும் என்று முதல்வர் கருணாநிதி புகழாரம் சூட்டினார்.


'இசைமணி-75' பத்மஸ்ரீ சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் பவள விழா சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு, சுவிஸ் மூர்த்தி தயாரித்த சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் பாடல்களின் பன்னாட்டு மொழி பெயர்ப்பு சி.டி.யை வெளியிட்டார். அதனை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பெற்றுக் கொண்டார். 

அதுபோல சீர்காழி கோவிந்தராஜன் பாடல்களின் ஒட்டுமொத்த தொகுப்பை மத்திய மந்திரி ஜி.கே.வாசன் வெளியிட முதல்வர் கருணாநிதி பெற்றுக் கொண்டார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்துச் செய்தி விழாவில் வாசிக்கப்பட்டது.

இந்த விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியது:

நான் ஒரு விழாவில் நடிகர் திலகம் சிவாஜியைப் பற்றிப் பேசும்போது சொன்னேன். விழாவிற்காக சொன்னதல்ல. சிவாஜியின் நண்பர்களுக்காகச் சொன்னதல்ல. அது எனக்காக நானே சொல்லிக் கொண்டது. 'சிவாஜியின் நடிப்பை இன்றைக்கும் தொலைக்காட்சிகளில் மறுபதிவாக வெளியிடும்போது சில நேரங்களில் என்னுடைய துணைவியார் கூட இங்கே வந்திருக்கிறார், அவருக்கே தெரியும், சிவாஜியின் நடிப்பைப் பார்த்து, அவருடைய வசன உச்சரிப்பைப் பார்த்து, அவர் கண்ணீர்விட்டு நடிக்கும்போதும், கனல் கக்க வசனம் பேசி நடிக்கும் போதும், அவர் அப்பராக நடித்தாலும் சரி, ஏழை சுப்பனாக நடித்தாலும் சரி, அந்த நடிப்பிலே காட்டுகின்ற உணர்வுகளைப் பார்க்கும் போதும் நான் எத்தனையோ முறை அந்தத் தொலைக்காட்சியைப் போய்த் தொட்டு முத்தமிட்டிருக்கிறேன்'. அதன் அடையாளம்தான் இன்றைக்கு சிவாஜியின் சிலை சென்னை கடற்கரையிலே நிற்பது என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

முத்தமிழ் என்று குறிப்பிடுகிறோம். இயல், இசை, கூத்து; நாடகம் என்று முத்தமிழைக் குறிப்பிடுகிறோம். அந்த இயல், இசை, கூத்து என்ற மூன்றும் சேர்ந்ததுதான் முத்தமிழ். 

இதிலே நான் சொல்வதுண்டு. இயல், இசை, நாடகம் என்று சொன்னாலுங்கூட, இயல்; வரிசையிலே முதலாவதாகவும், இசை; இரண்டாவதாகவும், நாடகம் மூன்றாவதாகவும் இன்றைக்கு சொல்லப்பட்டாலும், உண்மையிலேயே மனித சமுதாயம் உருவானபோது அந்தச் சமுதாயத்திற்குத் தேவைப்பட்டது, முதலில் நாடகம்தான். ஏனென்றால் மனிதர்கள் பிறந்தவுடன் பேசவில்லை, பேசத் தெரியாது, யாரும் ஒருவரோடு ஒருவர் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள மொழியைப் பயன்படுத்தவில்லை, காரணம் அப்போதெல்லாம் மொழி தோன்றவில்லை.

நடுவில் நிற்கும் இசை!

அதனால் ஒரு மனிதன் தன்னுடைய உணர்வை இன்னொருவனுக்கு எடுத்துச் சொல்ல நாடகம்தான் ஆடினான், வா, போ என்று கையை அசைத்து, காலை அசைத்து, கோபத்தை கண்ணிலே காட்டி, அடிப்பதன் மூலம் உணர்த்தி, இப்படி அசைவுகள், நாடகம், கூத்து, அதுதான் முதல் முறையாக மனிதனுக்குப் பயன்பட்டது.

அதற்குப் பிறகு இசை, தொலைவிலே உள்ள ஒருவனை அழைக்க ஓ என்று கூச்சலிட்டும், ஆ என்று நீட்டி முழக்கியும், அதுவே அந்த ஓசையே இசையாக ஆயிற்று. பிறகுதான் இதெல்லாம் சேர்த்து இயல், மூன்றாவதுதான் இயல். 

வேடிக்கை என்னவென்றால் இந்த இயல் இப்போது முதலிலே வந்துவிட்டது. இயல், இசை, நாடகம் என்று நாடகம் கடைசியாகப் போய்விட்டது. இதிலே இசை கெட்டிக்காரத்தனமாக இந்த இயலுக்கும் நாடகத்துக்கும் நடந்த போட்டியில் கலந்து கொள்ளாமல் நடுவிலேயே இருந்துவிட்டது, இப்போதும் நடுவிலேயே இருக்கின்றது. இசை மாத்திரமல்ல, இசைவாணர்களும்கூட அங்கும் போகாமல், இங்கும் போகாமல் நடுநிலையாகத் தான் இருப்பார்கள். சீர்காழி கோவிந்தராசன்கூட அப்படித்தான் இருந்தார். இன்றைக்கு தம்பி சிவசிதம்பரம் அப்படித்தான் இருக்கிறார்.

தமிழை மணவறையில் உட்கார வைத்தார்!

அருமையாக ஒரு கச்சேரி நடக்கும்போது துண்டுத்தாள் வரும், இரண்டு சில்லறை பாடுங்கள் என்று, அதாவது தமிழிலே பாடுவதற்குப் பெயர் சில்லறை. தமிழ் சில்லறையாக இருந்த ஒரு காலம், அந்த சில்லறையாக இருந்த காலத்தை கல்லறைக்கு அனுப்பிவிட்டு, இன்றைக்கு தமிழை மணவறையில் உட்கார வைத்திருக்கின்ற பெருமை யார் யாருக்கு சேருமென்றால், நெஞ்சில் நிறைந்த சீர்காழி கோவிந்தராசனைப் போன்ற இசைவாணர்களைச் சேரும்.

அப்படிப்பட்ட பெருமைக்குரியவர்களின் வரிசையிலே இருந்து இன்றைக்கும் நம்முடைய நெஞ்சிலே இடம் பெற்றிருக்கின்ற சீர்காழி கோவிந்தராசன், அவருடைய மகன் தம்பி சிவசிதம்பரம் நடத்திய தந்தைக்கு ஆற்றிய கடமையை, இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்டியிருக்கிறார். தம்பி சீர்காழி கோவிந்தராசனுடைய நினைவை என்றைக்கும் போற்றுவோம்.

எல்லோரும் இந்த விழாவிலே ஒரு உணர்வைப் பெற்றிருக்கிறோம். அந்த உணர்வுதான் நாமெல்லாம் ஒரே குடும்பம், இசை குடும்பம். இசை என்பது முத்தமிழிலே ஒன்று இயல், இசை, கூத்து என்ற மூன்று தமிழிலே ஒரு தமிழ், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நாம் இசை மண்டபத்திலே கூடி இன்றைக்கு இந்த விழாவினை நடத்தியிருக்கிறோம் என்றால், இது நாம் ஒரு இசைவாணனுக்கு, ஒரு இசைக் குடும்பத்து பிள்ளைக்கு, இசையைப் பரப்பி இசைபட வாழ்ந்த தம்பிக்கு ஆற்றியுள்ள கடமை, அந்தக் குடும்பம் நமக்கு ஆற்றியுள்ள கடமைக்கு நாம் காட்டுகின்ற நன்றி ஆகும்..." என்றார் முதல்வர் கருணாநிதி.

Related TamilNadu News:

Poet Kannadasan , Singing appraisals of Tamil
Guru Kadaatcham Is The Base For My Success -S.P.Balasubramaniam
Singing praises of Moopanaar