Home Tamil News Tamil Nadu News கூடவே பிறந்த பிரச்சினை! - காவிரி விவகாரம் குறித்து கருணாநிதி பேச்சு


Illinois Institute Of Technology

Latest News:

கூடவே பிறந்த பிரச்சினை! - காவிரி விவகாரம் குறித்து கருணாநிதி பேச்சு

December 22, 2009 18:04:35

சென்னை: "நான் பிறந்த போது என்னுடன் சேர்ந்தே பிறந்த பிரச்சினை இந்த காவிரி விவகாரம். இன்னும் தீர்க்க முடியாத பிரச்சினையான இதனைத் தீர்த்து வைக்கப் போராடிக் கொண்டிருக்கிறேன்" என்றார் முதல்வர் கருணாநிதி. 


மேட்டூர் அணை பவள விழாவை வீடியோ கான்பரசிங் மூலம் தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
 
தமிழ் இலக்கியத்திலும், தமிழர் தம் வாழ்விலும் வளம் சேர்த்த காவிரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வரும் வேளைகளில் அதனைத்தடுத்து, சேமித்து வைத்து அறுவடைக்காலம் வரை தேவையான நேரங்களில் நீரைப் பயன்படுத்துவதற்கு அணை ஒன்று கட்டப்பட வேண்டும் எனும் எண்ணம் 19-ஆம் நூற்றாண்டில் எழுந்தது.
 
அதனைத் தொடர்ந்து நமது நாட்டிலிருந்த அன்றைய ஆங்கிலேய ஆட்சி காவிரியில் அணை கட்டுவதற்குரிய இடத்தை ஆய்வு செய்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த பா.வெ.மாணிக்க நாயக்கர் குறிப்பிட்ட இடமான மேட்டூரைத் தேர்வு செய்தது கர்னல் டபிள்யூ எம்.எல்.லிஸ் என்ற புகழ் பெற்ற ராணுவப் பொறியாளர் 1910-ஆம் ஆண்டில் அணையை வடிவமைத்து உரிய மதிப்பீடுகளோடு ஆங்கிலேய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பினார்.
 
அதே கால கட்டத்தில் அன்றைய மைசூர் சமஸ்தானமும், பொறியாளர் சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா உதவியுடன் காவிரியில் மைசூர் அருகே கிருஷ்ணராஜசாகர் நீர்த்தேக்கத்தை அமைத்திட ஆங்கிலேய அரசிடம் அனுமதி கோரியது.
 
எனவே, காவிரி நீரைப்பயன்படுத்துவது தொடர்பாக அப்பொழுதே பிரச்சினைகள் எழுந்து, பல்வேறு முயற்சிகளுக்குப்பின் 1924ஆம் ஆண்டில் சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் அரசுக்கும் இடையே ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. 1924-ஆம் ஆண்டுதான் காவிரிப் பிரச்சினை ஆரம்பமானது. அதே 1924-ஆம் ஆண்டும் தான் நானும் பிறந்தேன். பிறந்தது முதல் இதுவரை அந்தப் பிரச்சினைக்காகத்தான் நான் வாதாடிக் கொண்டிருக்கிறேன். போராடிக்கொண்டிருக்கிறேன். அந்த உடன்படிக்கைக்குப் பின், காவிரியில், மேட்டூர் அணை கட்டுவதற்கு 6 கோடியே 12 லட்சம் ரூபாயை அனுமதித்து 3.3.1925 அன்று இங்கிலாந்தில் ஆணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.
 
அதனைத் தொடர்ந்து, பொறியாளர் சர்.கிளமெண்ட் முல்லிங்ஸ் என்பவரது தலைமையில் தமிழப் பொறியாளர்கள், தொழிலாளர்கள், குறிப்பாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கல் தச்சுத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் கூடி மேட்டூர் அணையின் கட்டுமான வேலைகளை 20-7-1925இல் தொடங்கி, 1934 ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் நிறைவேற்றி முடித்தார்கள்.
 
ஏறத்தாழ 9 ஆண்டு காலத்தில் 120 அடி உயரத்திற்குத் தண்ணீரைத் தேக்கும் வகையில், 5 ஆயிரத்து 300 அடி நீளமும், 177 அடி அகலமும் உடையதாக கட்டி முடிக்கப்பட்ட இந்த மேட்டூர் அணையிலிருந்து 12-6-1934 அன்று முதன் முதல் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டது," என்றார்.

Related Tamil Nadu News:

ரேஷன் அட்டைகள் 2011 வரை செல்லும்!
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் சென்னை வருகை!

கருணாநிதிக்கு 'தமிழ் தலைமகன்' விருது வழங்கப்பட்டது!