கொல்கத்தா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பெரும் தலைவரான ஜோதிபாசு நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 95.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவராக விளங்கியவர் ஜோதிபாசு. அவருக்கு வயது 95.
கால் நூற்றாண்டு காலம் மேற்கு வங்காள மாநில முதல்வராக பதவி வகித்த ஜோதி பாசு, முதுமை காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தாமாகவே பதவியை விட்டு விலகினார். தீவிர அரசியலில் இருந்து விலகி, கொல்கத்தாவில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
ஜோதிபாசுவுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த 1-ந் தேதி கொல்கத்தா சால்ட் லேக் பகுதியில் உள்ள ஏ.எம்.ஆர்.ஐ. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். நிமோனியா காய்ச்சலுடன் சுவாசக் கோளாறும் ஏற்பட்டது. மேலும் நுரையீரல், சிறுநீரகம், மூளை போன்ற உறுப்புகளும் செயல் இழக்க தொடங்கின.
இதனால் டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் ஜோதிபாசுவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வந்தது.
நேற்று பகல் 11.47 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.
அப்போது அவரது மகன் சந்தன் பாசு, மருமகள் ராக்கி, பேத்திகள் பாயல், தோயல், கோயல் ஆகியோர் அருகில் இருந்தனர்.
தலைவர்கள் அஞ்சலிஜோதிபாசு மரணம் அடைந்ததை அவரது டாக்டர் அஜித்குமார் மைத்தி அறிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பிமன் போஸ் அழுதபடியே மருத்துவமனைக்கு வெளியே வந்து கூறினார்.
ஜோதிபாசு மரணம் அடைந்தது பற்றிய தகவல் கிடைத்ததும் மேற்கு வங்காள முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்கள் பிரகாஷ் கரத், பிருந்தா கரத், பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.
கொல்கத்தா நகரில் இருந்த உள்துறை மந்திரி ப.சிதம்பரமும் மருத்துவமனை சென்றார்.
பின்னர் ஜோதிபாசுவின் உடல் அங்கிருந்து, ஒரு வாகனத்தில் சால்ட் லேக் பகுதியில் உள்ள அவரது மகன் சந்தன் பாசுவின் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பிறகு, அங்கிருந்து உடலை பீஸ் ஹெவன் என்ற இடத்துக்கு கொண்டு சென்றனர். அவரது உடல் மீது செங்கொடி போர்த்தப்பட்டு இருந்தது.
அப்போது, சாலைகளின் இருபுறமும் திரண்டு நின்ற ஏராளமான மக்கள், 'ஜோதிபாசு அமரர் ஆனார்' என்று குரல் எழுப்பினார்கள்.
ஜோதிபாசுவின் உடல் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு பீஸ் ஹெவனில் இருந்து, மேற்கு வங்க மாநில தலைமைச் செயலக கட்டடத்துக்கு (ரைட்டர்ஸ் பில்டிங்) கொண்டு செல்லப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து உடலை சட்டசபை கட்டிட வளாகத்துக்கு கொண்டு சென்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கிறார்கள். காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை உடல் அங்கு வைக்கப்பட்டு இருக்கும். தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் அங்கு வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள்.
அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி முடிந்ததும் உடல், அலிமுதீன் சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கு மாலை 4 மணி வரை உடல் வைக்கப்பட்டு இருக்கும்.
உடல் தானம்அதன்பிறகு ஜோதிபாசுவின் உடல் அங்கிருந்து ஊர்வலமாக தெற்கு கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு தானமாக வழங்கப்படும்.
ஜோதிபாசு தனது கண்களையும், உடலையும் தானமாக வழங்குவதாக அறிவித்து இருந்தார். எனவே நேற்று அவர் மரணம் அடைந்ததும், அவரது கண்கள் அகற்றப்பட்டன.
மேலும் அவரது விருப்பப்படி, உடலும் மருத்துவ கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கப்படுகிறது.
விடுமுறைஜோதிபாசுவின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில், மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று (திங்கட்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிபாசுவின் மரணத்துக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Related National News:
ராஜசேகர ரெட்டியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலிஹெலிகாப்டர் விபத்தில் சந்தேகம்ஆந்திராவை உலுக்கிய ஹெலிகாப்டர் விபத்து