தேர்தல் கமிஷன் வார விழா கொண்டாட்டங்களில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
விழா நடைபெற்ற விக்ஜான் பவனுக்கு நேற்று காலை சுமார் 10.40 மணியளவில் ஜெயலலிதா வந்தார். அவரை தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா வரவேற்று வி.ஐ.பி.க்கள் காத்திருப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
அப்பொழுது, அங்கு இருந்த பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், தேசிய ஜனநாயக கூட்டணி அமைப்பாளர் சரத் யாதவ் ஆகியோர் ஜெயலலிதாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பின்னர் சிறிது நேரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவரை நவீன்சாவ்லா வரவேற்று வி.ஐ.பி.க்கள் காத்திருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு சோனியா காந்தியும், ஜெயலலிதாவும் நேரில் சந்தித்து வணக்கம் தெரிவித்தனர். ஒருவருக்கு ஒருவர் உடல் நலம் விசாரித்து கொண்டனர்.
இந்த நிலையில் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார், அவரை தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்களுக்கு ஜெயலலிதா வாழ்த்துக்களையும் தனது வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டார்.
காலை 11 மணியளவில் விழா நடைபெறும் அரங்கிற்கு ஜெயலலிதா வந்தார். அவையின் முதல் வரிசையில் அவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்திற்கு அவர் சென்றார்.
முன்னதாகவே அங்கு அமர்ந்திருந்த முலாயம்சிங், பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரி, அகாலி தளம் கட்சியின் தலைவரும் பஞ்சாப் மாநில முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல், முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவேகவுடா போன்ற தலைவர்கள் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.
பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் தலைவரும், நடிகருமான சிரஞ்சீவியும், ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு ஜெயலலிதா நேற்று மாலை 5.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை அ.தி.மு.க. வினர் வரவேற்றனர்.
பின்னர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா,
"டெல்லி பயணம் மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் இருந்தது. டெல்லியில் தேர்தல் ஆணையத்தின் 60-வது ஆண்டு விழா ஆண்டு வைர விழாவில் சோனியாவும் நானும் ஒன்றாக கலந்து கொண்டோம். நான் சோனியாவிற்கு வணக்கம் தெரிவித்தேன். அவரும் வணக்கம் தெரிவித்தார். நாங்கள் இருவரும் பரஸ்பரமாக நலம் விசாரித்துக் கொண்டோம்", என்றார்.
Related TamilNadu News:
டெல்லியில் ஜெயா... சோனியாவைச் சந்திக்கிறார்?மக்கள் நம்ப மாட்டார்கள்! - ஜெஆண்டவன்தான் நாட்டை காப்பாத்தணும்! - ஜெ