அகன்ஷா சார்தாவுக்கு வயது 18 தான். இந்த வயதில் அவர் வரலாற்றுச் சாதனை
செய்துள்ளார். சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாடில் கலந்துகொண்டு
தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார் அகன்ஷா சார்தா.
சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாடில் இந்திய பெண் ஒருவர் தங்கப்பதக்கம் வெல்வது
இதுதான் முதல் முறையாகும்.
இந்த சாதனை குறித்து அகன்ஷா கூறுகையில் 'என்னை
ஆனந்த அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ள கெளரவம் இது. இயற்பியல் துறையைப்
பொருத்தவரை பெண்கள் அதில் ஜொலிப்பதில்லை என்பது பொதுவான கருத்து. அதை
உடைத்ததில் எனக்கு சந்தோஷமே' என்கிறார் அகன்ஷா.
முன்னதாக, குரேஷியா நாட்டில் இம்மாத துவக்கத்தில் நடந்த சர்வதேச இயற்பியல்
துறை போட்டியில் 82 நாடுகளில் இருந்து 376 போட்டியாளர்கள்
கலந்துகொண்டனர். இந்தியா சார்பில் சென்ற மாணவர் அணி ஒரு தங்கப்பதக்கம், 3
வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப்பதக்கத்துடன் நாடு திரும்பியது.
'கடந்த 13 வருடங்களாக இந்தப் போட்டியில் இந்தியா கலந்துகொண்டு வருகிறது.
இதுவரை இந்திய பெண்கள் இருவர் மட்டுமே போட்டியில் பங்கேற்றுள்ளனர். அதில்
முதல்முறையாகச் சென்ற அகன்ஷா, முதல் முறையாக இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்
பெற்று தந்து பெருமைப்படுத்தியிருக்கிறார்' என்கிறார் தேசிய அளவிலான அறிவியல்
போட்டிகளை நடத்தும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஜய் சிங்.
+2 வை இவ்வருடம் முடித்த அகன்ஷா, ஐஐடியில் சேர்வதற்கான
போட்டித் தேர்வில் 18 ஆவது இடத்தைப் பிடித்தார். ஆயினும் அவர்
ஐஐடியில் சேராமல் அமெரிக்காவில் உள்ள எம்ஐடி யில் சேர்ந்து படிக்க உள்ளார்.
'உலகில் தீர்க்கப்படாத பிரச்னைகள் ஏராளமாக உள்ளன. உலகத்தின் எரிபொருள் தேவை
இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. இதில் எல்லாம் ஆராய்ச்சி செய்ய ஆர்வமாக
உள்ளேன்' என்று அகன்ஷா கூறியுள்ளார்.
-சிவாஜி டிவி
Related National News:The Hurt Locker wins 6 Oscar awards; 3 for AvatarCape Cobras Wins Over
Royal ChallengersIIFA Award: Asin Wins Best Debutante
Actress