கச்சத்தீவை திரும்பப் பெற முடியாது! - எஸ்.எம்.கிருஷ்ணா
December 08, 2009 11:45:20
டெல்லி: கச்சத்தீவை இலங்கையிடமிருந்து திரும்பப் பெற முடியாது என இந்தியா அறிவித்துள்ளது.
டெல்லி ராஜ்ய சபையில் நேற்று இலங்கை பிரச்சினை குறித்து விவாதம் நடந்தது. இதில் கலந்து கொண்டு எம்.பி.க்கள் பேசினார்கள்.
பா.ஜனதா எம்.பி. வெங்கையா நாயுடு பேசும் போது கூறியதாவது:
இலங்கையில் அகதி முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. இதுபற்றி மத்திய அரசு உறுதியான தகவல் எதுவும் அளிக்கவில்லை. இது பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல. இலங்கையில் வாழும் இந்தியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. ஆகவே, உண்மை நிலையை அறிய, அங்கு அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பி வைக்க வேண்டும். ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை சபையில் தாக்கல் செய்தால் மகிழ்ச்சி அடைவோம், என்றார்.
அதற்கு பதில் அளித்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாவது:
தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே விடுத்த அழைப்பின்பேரில், ஓர் இந்திய குழு அனுப்பி வைக்கப்பட்டது. அது பாராளுமன்ற குழுவாக இல்லாதபோதிலும், அதில் சில எம்.பி.க்கள் இடம்பெற்றனர். அவர்கள் அங்கு சென்று திரும்பிய பிறகு பிரதமரிடம் அறிக்கை அளித்தனர்.
இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா கூறியபோது, அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன் குறுக்கிட்டு, 'அந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யாதது ஏன்?' என்று கேட்டார்.
எஸ்.எம்.கிருஷ்ணா தொடர்ந்து கூறுகையில், "இலங்கைக்கு மீண்டும் குழுவை அனுப்புவது பற்றி பாராளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். எனது கருத்து என்னவென்றால், இலங்கை அதிபர் தேர்தல் நெருங்கும் நேரத்தில், அங்கு குழுவை அனுப்பக்கூடாது என்பதுதான்.
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதாக புகார்கள் வருகின்றன. எனவே, கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்காக இலங்கை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள நாங்கள் யோசனை தெரிவித்துள்ளோம். இதில் உள்ள நியாயத்தை இலங்கை அரசு உணரும் என்று நம்புகிறோம். எனவே, சில நாட்களில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி விடும்.
கச்சத்தீவு பிரச்சினை முடிந்துபோன விஷயம். அதில் மறுபரிசீலனை செய்வது அல்லது கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.
இலங்கை நமது நட்பு நாடு. இந்தியாவின் பாதுகாப்புக்காக இலங்கையுடன் சுமூக உறவை கடைபிடித்து வருகிறோம். நாட்டு நலனுக்காக இலங்கையுடன் ராணுவ ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகிறோம். போரில் இலங்கை ராணுவத்துக்கு இந்தியா உதவி செய்ததாக கூறுவது தவறு. போரின்போது, தமிழர்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்தியதே, இந்தியாதான். மனித உரிமை மீறல்கள் எங்கு நடந்தாலும், அதை இந்தியா அங்கீகரித்தது இல்லை.
இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்களில் இருந்து ஒன்றரை லட்சம்பேர், அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதி உள்ள ஒரு லட்சம் பேரையும் குடியேற்றம் செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை வற்புறுத்துவோம்.
இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வுதான், நிரந்தர தீர்வாக அமையும். அதற்கான அரசியல் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது பிரிவை திருத்தி நடைமுறைப்படுத்துவது மூலமே தீர்வு காண முடியும்.
இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு இந்திய அரசு கணிசமான நிதி உதவி அளித்துள்ளது. தமிழகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அடங்கிய இரண்டரை லட்சம் குடும்ப பைகள் அனுப்பி வைக்கப்பட்டன. அவை செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐ.நா. அகதிகள் அமைப்பு மூலமாக வினியோகிக்கப்பட்டன. அவையெல்லாம் பயனாளிகளிடம் போய் சேர்ந்து விட்டதாகவே எங்களுக்கு தகவல் வந்துள்ளது. இருப்பினும், இலங்கை தமிழர்களுக்கு செய்தது போதுமானது அல்ல என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
இலங்கையில் இந்திய அரசு மேலும் பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அவற்றை கண்காணித்து வருகிறோம். சிங்கள பகுதிகளில் மட்டுமே திட்டங்கள் அமல்படுத்தப்படுவதாக கூறுவது தவறு" என்றார்.