இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான ஜெய்ப்பூர் முதல் ஒருநாள் போட்டி மிகவும் பரபரப்பாக அமைந்துவிட்டது. இந்த ஆட்டத்தில் இந்தியா 1 ரன்னில் வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 298 ரன் எடுத்தது. சுரேஷ் ரெய்னா 58ரன்னும், ஷேவாக் 46 ரன்னும், தினேஷ் கார்த்திக் 44 ரன்னும் எடுத்தனர். காலிஸ் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் தென்-ஆப்பிரிக்கா விக்கெட்டுகள் சரிந்தன. அந்த அணி ஒரு கட்டத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 180ரன் என்ற நிலையில் இருந்தது. நம்பிக்கை நட்சத்திரமாக சிறப்பாக ஆடி வந்த காலிஸ் 89 ரன்னில் அவுட் ஆனார். அப்போது தென் ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 8 விக்கெட்டுக்கு 225 ஆக இருந்தது.
கடைசி 7 ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 74 ரன் தேவைப்பட்டது. கைவசம் 2 விக்கெட் இருந்தது. இதனால் இந்தியா எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 9-வது விக்கெட்டான பர்னல்- ஸ்டெய்ன் ஜோடி இந்திய பந்து வீச்சை விளாசி தள்ளி அணியை வெற்றி விளிம்பு வரை அழைந்து வந்தது. கடைசி ஓவரில் தான் இருவரும் ஆட்டம் இழந்தனர். அந்த அணி 50 ஓவரில் 297 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
இந்த இருவரால்தான் ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது. பர்னல் 47 பந்தில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 49ரன்னும், ஸ்டெய்ன் 19பந்தில் 1பவுண்டரி, 3 சிக்சருடன் 35ரன்னும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் ரவிந்திர ஜடேஜா, பிரவீண்குமார், ஸ்ரீசாந்த் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
வெற்றி குறித்து கேப்டன் டோனி கூறியதாவது:
வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்தது. இது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக உள்ளது. ஆனால் பந்து வீச்சிலும், பீல்டிங்கிலும் முன்னேற்றம் தேவை. தென்ஆப்பிரிக்க அணியின் கடைசி நேர ஆட்டக்காரர்கள் பர்னல்- ஸ்டெய்ன் இந்திய பவுலர்களை திணறடித்து விட்டனர். ரன்களை வாரி கொடுத்துவிட்டனர். இனி வரும் ஆட்டங்களில் பந்து வீச்சில் முன்னேற்றம் தேவை.
பந்து வீச்சில் ஷேவாக்கை பயன்படுத்தவில்லை. யூசுப்பதான் நன்றாக வீசினார். ரவிந்திர ஜடேஜா பேட்டிங், பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டார்.
29ரன்கள் தான் அவர் விட்டுக்கொடுத்தார். அவரை மிகவும் பாராட்டுகிறேன்.
இனிவரும் ஆட்டங்களில் வெற்றிபெற கூடிய வல்லமை தென்ஆப்பிரிக்காவுக்கு உள்ளது. இரு அணிகளுமே சமபலம் வாய்ந்தவை. இதனால் எஞ்சிய போட்டிகளும் பரபரப்பாக இருக்கும், என்றார் டோணி.
2-வது ஒரு நாள் போட்டி வருகிற 24-ந்தேதி (புதன்கிழமை) குவாலியரில் நடக்கிறது.
Related Sports News:
டெஸ்ட் போட்டி: முதலிடத்தைத் தக்க
வைத்துக் கொண்ட இந்திய அணி2 வது
டெஸ்ட்: 347 ரன்கள் அதிகம் பெற்று
டிக்ளேர் செய்த இந்தியா