சென்னை : தமிழக சட்டசபைக்கு எப்போது தேர்தல் நடந்தாலும் அது, 'கை'யோடு தான் நடக்கும், என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
இதன் மூலம், வரும் சட்டசபை தேர்தலிலும் காங்கிரசுடன்தான் கூட்டணி என்பதை, தி.மு.க., தலைவர் உறுதிபடுத்தியுள்ளார்.
திருச்சியில் நேற்று, கலைஞர் வீட்டு வசதித் திட்டம் துவக்க விழா நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை திருச்சி சென்ற அவர், நிருபர்களின் கேள்விகளுக்கு பேட்டி அளித்தார்.
பேட்டி விவரம்:தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளீர்கள். அதுபோல், வரும் பட்ஜெட்டில் மக்களுக்கு சிறப்பு திட்டங்கள் ஏதும் இருக்குமா?அது, 20ம் தேதி காலை தெரியும்; 19ம் தேதி மாலையும் தெரிந்து கொள்ளலாம்.
டெல்லியில் நடந்த மாநில முதல்வர்கள் மாநாட்டில் விலைவாசி குறைப்பது தொடர்பாக ஆலோசிக்க, உங்கள் தலைமையில் ஐந்து மாநில முதல்வர்கள் கொண்ட குழு அமைக்கப் பட்டதே. அரசுக்கு ஏதும் ஆலோசனை கூறியுள்ளீர்களா?ஆலோசனை கூறுவோம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற எதிர்க்கட்சிகள் போல் மத்திய அரசை வலியுறுத்துவீர்களா?இதுகுறித்து பிரதமரிடம் பேசிய பின்னர், மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி என்னிடம் விரிவாகப் பேசினார். மத்திய அரசின் வருவாய் 2010-11ம் ஆண்டில் ஒன்பது லட்சம் கோடி ரூபாய். அதில், வரிகள் மூலம் ஏழரை லட்சம் கோடி ரூபாயும், மற்ற வருவாய் மூலம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயும் வருகிறதாம். இதில், மத்திய அரசுக்கு நிதிப் பற்றாக்குறை 3 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்.
இந்த பற்றாக்குறை நிதியை சரிக்கட்ட, கடன் வாங்க வேண்டியுள்ளது. மத்திய அரசின் நிதிக்குழு நிதி பற்றாக்குறை 3 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், தற்போது நிதி பற்றாக்குறை 5.5 சதவீதமாக உள்ளது.
வரும் காலங்களில் நிதி பற்றாக்குறையை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் மத்திய அரசு உள்ளது. பற்றாக்குறையை போக்க, வங்கிகளிடம் கடன் வாங்கும் முறை உள்ளது. ஆனால், இவ்வளவு தொகையை வங்கி கொடுத்து விட்டால், மற்ற தொழில் துறைகளுக்கு கடன் வழங்க முடியாமல் போய் விடும். ஆகையால், மத்திய அரசு பற்றாக்குறையை சமாளிக்க, வரி போட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
அதில் ஒன்றுதான் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. இதனால், நேரடியாக விவசாயிகளும், உணவு உற்பத்தியாளர்களும் பாதிக்கப்படுவர் என்ற காரணத்தால், டீசல் விலை உயர்வை மட்டும் ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். இதை தி.மு.க., எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு தலைமையில் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தியுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிநடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்வீர்களா?எங்களைப் பொறுத்தவரை அண்ணா கற்றுத் தந்த வழியில், மக்களுக்கு தேவையானதை கருத்து வடிவத்திலும், விவாத வடிவத்திலும் எடுத்துரைத்து தீர்வு காண்போம். மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்து போக விடமாட்டோம். விலை உயர்வால் ஓட்டளித்த மக்களும், வாக்காளர்களும் தான் பாதிப்படைவர். ஆகையால், விலையை குறைக்க தொடர்ந்து விவாத அடிப்படையில் வலியுறுத்துவோம்.
பென்னாகரத்தில் இடைத்தேர்தலை மீண்டும் தள்ளி வைக்க வேண்டும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளாரே?பஞ்சுதான் இந்த பாடுபடும்.
இடைத்தேர்தல் என்றாலே தி.மு.க., தான் என்றுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் அணுகுமுறை, தேர்தல் வராமல் இருந்தால் போதும் என்ற நிலையில் உள்ளது குறித்து உங்கள் கருத்து?கட்சியின் வலிமை, மக்களிடம் அந்த கட்சி பெற்றுள்ள பொழிவைப் பொறுத்தே உள்ளது.
பார்லிமென்டில் தமிழ் மொழியில் பேச அனுமதிப்பது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்துவீர்களா?பார்லிமென்டில் தமிழில் மட்டுமல்ல, அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.,க்கள் அவர்களின் தாய்மொழியிலேயே பேச, மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக இருக்கும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் பேச அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
கோவையில் நடைபெறும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு பின், தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரும் என்று கூறப்படுகிறதே?மாநாட்டுக்கு முன்னோ, பின்னோ தேர்தல் எப்போது நடந்தாலும், 'கை'யோடு தான் தேர்தல் நடக்கும். .." என்றார்.
Related TamilNadu News:
அதிமுகவுடன் கூட்டணி இல்லை! - காங்கிரஸ்
அறிவிப்புDMK
Might Alliance With Opposition Parties Against CongressCaptain Veers Election Ship