Home Tamil News Tamil Nadu News புதுப்பொலிவுடன் மெரீனா... திறந்து வைத்தார் முதல்வர்!
  

Latest News:

புதுப்பொலிவுடன் மெரீனா... திறந்து வைத்தார் முதல்வர்!

December 21, 2009 18:06:11

சென்னை: அழகுபடுத்தப்பட்ட மெரீனா கடற்கரையை இன்று திறந்து வைத்தார் முதல்வர் கருணாநிதி.
உலகில் உள்ள நீளமான கடற்கரையில் இரண்டாமிடம் வகிப்பது சென்னை மெரீனா கடற்கரை. 
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் இடமிது. 

சென்னைவாசிகளுக்குள்ள ஒரே திறந்த வெளி பொழுது போக்கிடம் இதுவே. காதலர்களின் சொர்க்கமாகவும் இந்த கடற்கரை திகழ்கிறது.

மெரீனா கடற்கரைக்கு வந்து செல்லும் பொது மக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு சென்னை மெரீனா கடற்கரையை உலக கடற்கரைத் தரத்திற்கு உயர்த்த அரசு முடிவு செய்தது. இதற்காக 25 கோடியே 92 லட்சம் ரூபாய் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டது.
 
கடந்த 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மெரீனா கடற்கரையை அழகு படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. நேப்பியர் பாலத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை காமராஜர் சாலையில் கிழக்குப்பக்கம் 3.1 கி.மீ. நீளத்திற்கு நடைபாதை கருங்கல் பலகை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
 
நடைபாதையின் ஓரத்தில் அழகிய, கண்ணை கவரும் தூண்கள், துருப்பிடிக்காத 'ஸ்டீல்' பைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மெரீனா கடற்கரைக்கு வரும் பொது மக்கள் உட்கார்ந்து ஓய்வு எடுப்பதற்காகவும், கடற் கரையின் அழகை ரசிக்கவும் 14 இடங்களில் வண்ண வண்ண கருங்கற்கள், 'கிரானைட்' கற்கள் கொண்டு கடற்கரையை பார்த்த வண்ணம் உட்காரும் வகையில் நவீன இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
 
நடைபாதைக்கும்-கடற்கரை பயன்பாட்டு சாலைக்கும் இடையில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்காக 4 இடங்களில் நவீன பொது கழிபபிடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
 
கண்ணகி சிலை அருகே நவீன முறையில் நடைபாதையும், சுரங்கப்பாதையும், கடற்கரையை சுற்றிலும் கண்கவரும் வகையில் பறவை வடிவிலான மின் விளக்குகளும் ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. காந்தி சிலை அருகில் அழகிய நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
இந்த அழகுபடுத்தும் பணியில் முழுமையாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர் துணை முதல்வர் முக ஸ்டாலின். இதனால் இப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன.  
 
நவீன முறையில் அழகு படுத்தப்பட்டுள்ள மெரீனா கடற்கரையின் திறப்பு விழா இன்று காலை, காந்தி சிலை அருகே நடந்தது. துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
 
அழகுபடுத்தப்பட்ட மெரீனா கடற்கரையை காலை 10.20 மணிக்கு திறந்து வைத்தார் முதல்வர் கருணாநிதி.
 
அங்கு மரக்கன்றும் நட்டார். பின்னர் அழகு படுத்தப்பட்ட கடற்கரையை பார்வையிட்டார்.

Related Tamil Nadu News:

வந்தவாசி, திருச்செந்தூரில் நாளை வாக்கு எண்ணிக்கை!

லெமன் சாதம், பிரியாணி விநியோகத்துடன் துவங்கிய இடைத்தேர்தல் வாக்குப் பதிவு!
காதல் படுத்தும் பாடு... மூவரை உயிரோடு எரிக்க முயன்ற சென்னை வாலிபர்!