ஆந்திராவை உலுக்கிய ஹெலிகாப்டர் விபத்து
சிபிஐ விசாரிக்க கோரிக்கை
ராஜசேகர ரெட்டியின் மரணத்திற்கு காரணமான ஹெலிகாப்டர் விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசை ஆந்திர அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி கடந்த வாரம் சித்தூர் மாவட்டத்திற்கு சென்ற போது அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் நல்லமாலா வனப்பகுதியில் மலை உச்சியில் மோதி நொறுங்கி விழுந்தது. இதில் ரெட்டியும், அவருடன் சென்ற 4 பேரும் பலியானார்கள். இந்நிலையில் ஆந்திர உள்துறை அமைச்சர் சவீதா ரெட்டி நேற்று கூறியதாவது,
ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ரோசைய்யா கடிதம் எழுதியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடமும் அவர் இதுகுறித்து பேசியுள்ளார். அவரும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட சம்மதம் தெரிவித்துள்ளார்.
மேலும் ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரிக்க மாநில அரசு சார்பிலும், இரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி எம்ஆர் ரெட்டி, மற்றும் சிவில் போக்குவரத்து துறையின் முன்னாள் இயக்குனர் ஜெனரல் கோலா ஆகியோர் கமிட்டியில் இடம் பெற்றுள்ளனர். இந்த கமிட்டியினர் விபத்து குறித்து முழுமையாக விசாரணை நடத்தி இரண்டு மாதத்தில் அறிக்கை தருவர். இந்த கமிட்டியின் விசாரணைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கும். இவ்வாறு சவீதா ரெட்டி கூறினார்.