தேர்தல் பிரச்சாரத்தில் பிரபாகரன் படத்திற்கு தடை!
December 07, 2009 10:41:34
திருச்செந்தூர்: இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பிரபாகரன் படத்தை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தக்கூடாது என, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் தெரிவித்தார்.
திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய ஆட்சியர் கோ. பிரகாஷ்,
திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்புமனுவில் என்ன வரிசையில் பெயர் கொடுத்தீர்களோ அதே வரிசைப்படி வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
திருச்செந்தூர் தொகுதி 17 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக புகார் வந்தால், அது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. வேட்பாளர்களில் சிலர் முதல் முறையாக தேர்தலை சந்திப்பவர்களாக இருக்கலாம். எனவே, தேர்தல் நடைமுறை குறித்து நீங்கள் புரிந்து கொள்வதற்காக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் தங்களது பிரசார வாகனங்கள் குறித்து முன்கூட்டியே தேர்தல் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தல் காரியாலயங்கள் அமைக்க முன் அனுமதி பெற வேண்டும். அது குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு முறையாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
சுயேச்சை வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது. அவ்வாறு செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது தேர்தல் செலவுகள் சம்பந்தப்பட்ட கட்சிகளின் தேர்தல் செலவில் சேர்க்கப்படும். தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து வேட்பாளர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
அப்போது சுயேச்சை வேட்பாளர் சி. அன்பழகன் குறுக்கிட்டு, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பெயர் மற்றும் படம் பத்திரிகைகள் மற்றும் வார இதழ்களில் வருகின்றன. எனவே, தேர்தல் பிரசாரத்தில் அதனைப் பயன்படுத்தலாமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஆட்சியர், அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட எந்த அமைப்பின் பெயரையோ, அந்த அமைப்பு தொடர்பான படங்களையோ தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தக் கூடாது. மேலும், அரசால் தடை செய்யப்பட்ட கருத்துகளையும் பேசக்கூடாது என்றார்.