Snehan - சினேகன் கவிதைகள் - அப்பன் யாரம்மா
part
சினேகன் கவிதைகள் - அப்பன் யாரம்மா
9
வேசி...
பெயரா ?
பட்டமா ?

மகளாய் பிறந்தேன்
நான் உனக்கு
அப்பன் யாரம்மா...

யாரோ செய்த பாவம்
ஊருக்குக் கிடைத்த
புண்ணியம் நான்...

வருத்தமெல்லாம்
வதை படுவதில் இல்லை
சதை தொடுவதில்தான்...
பருத்த மார்பாம் உனக்கு
உன்னைப் போலவே
இருக்காம் எனக்கும்
அடையாளம் சொல்கிறார்கள்...

தானம் கொடுத்தவர்க்குத்
தன்னைக்  கொடுத்தாய்
சரி
என்னை ஏன் கொடுத்தாய் ?
அப்பன் யாரம்மா...

நீ பசியாற
சேமித்த பாவம் நான்...

எவன் தந்த
ரொக்கம் நான்...

அங்கீகாரம் இல்லாத
அப்பன் யார் ?

தாய்வழி மறப்பது
தர்மம் இல்லை...
தாய் தொழில் செய்யவும்
மனசு இல்லை...
உடலளவில்
எனக்கு நோய்கள் இல்லை...
மனதளவில் நான்
தூய்மை இல்லை...
அப்பன் யாரம்மா ?

இனிஷியல் போட்டுக்
கொள்ளவோ
இம்சை கொடுக்கவோ
கேட்கவில்லை...

சோத்துரிமைக்கோ    
சொத்துரிமைக்கோ 
கேட்கவில்லை
அப்பன் யாரம்மா

எல்லாம் தெரிந்தமுகம்
எல்லாம் பழகியமுகம்
எல்லாம் பழையமுகம்...
அப்பன் யாரம்மா...

உன்னிடம் வந்தவர்கள் எல்லாம்
என்னிடமும் வருகிறார்கள்

தவறியும் அப்பனிடமே
படுத்துவிடக் கூடாதல்லவா
அப்பன் யாரம்மா... 

                                                                  
  (தொடரும்)...