Snehan - சினேகனின் கவிதைகள் - புதிய தொடர்: ஆறாம் அறிவு
சினேகனின் கவிதைகள் - புதிய தொடர்: ஆறாம் அறிவு
2

ஆறாம் அறிவு
என்னவென்று
ஆராயாமல் நாம் இருந்தோம்...
கண்டு,உண்டு
உணர்ந்து கொண்டு
காரியம் செய்ய நாம் மறந்தோம்
கண்கள் உணர்ந்து
நாவில் வரைந்த
சப்த மொழிகள்
அதுஇல்லை....
கண்கள் இழுத்து
மனதில் திணித்து
மயக்கும் செயல்கள்
அது இல்லை....
நெஞ்சில் உறங்கும்
கற்பனை சிசுக்கள்
கலையும் பயணம்
அதுஇல்லை....
ஈர்த்து வேர்த்துப்
பூத்து உதிரும்
காதல் வெறுமை அதுஇல்லை
தேவையறிந்து
தேடிப்பிடித்து
கொடுத்து வாங்குதல்
அதுஇல்லை
பூச்சியும்,புழுவும்
பறவையும்,மிருகமும்
இதைத்தான்
இயல்பாய் செய்கின்றன...
இவைகள் ஆறாம் அறிவில்லை...
பனிக்கரடிப் போல்
பாசம் வைக்க
இதுவரை தாய்கள்
பிறக்கவில்லை - அதனால்
பாசம் ஆறாம் அறிவில்லை...
நீ வங்கிகளில் சேகரிக்கிறாய்
ஒட்டகமும் உடம்பிற்குள்
சேகரிக்கிறது - அதனால்
சேமித்தல் ஆறாம் அறிவில்லை....
நீ பேராசையால் போர் புரிகிறாய்
மிருகமோ தன்னை காக்க
போர் புரிகிறது - அதனால்
போரிடுதல் ஆறாம் அறிவில்லை...
உன்னைப் போல்
எல்லா உயிர்க்கும்
இறப்பும்,பிறப்பும் தெரியாது
அதனால் அறிதல்
ஆறாம் அறிவில்லை....
எல்லா உயிருக்கும் உன்னைப்போல்
பசியும் பிணியும்
சுவாசமும் உண்டு - அதனால்
வாழ்தல் ஆறாம் அறிவில்லை....
உந்தன் பாஷை
புரியாது அதுக்கு
அவைகளின் பாஷை
புரியாது உனக்கு - அதனால்
பாஷைகள் ஆறாம் அறிவில்லை....
ஒவ்வொரு நொடியும்
உனக்கென்று
உழைக்கும் சக்தி
உனக்குண்டு....
ஒவ்வொரு திசையும்
கிழக்கென்று
திறக்கும் சக்தி
உனக்குண்டு....
திட்டமிட்ட
வாழ்வொன்று
தோற்பதே இல்லை
பார் இன்று....
அவனவன் விதியை
அவனவன் எழுதும்
அபூர்வ சக்தி நமக்குண்டு
அதுதான்
ஆறாம் அறிவென்று
எழுதி கொள்ளடா நீ இன்று...
(தொடரும்)...



